

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளு மன்றத்தில் உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.
விசுவ இந்து பரிஷத் செயல் வீரர்கள் கூட்டம் கோவையில் மாவட்டச் செயலாளர் எல்.சிவலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரவீன் தொகாடியா கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததற்கு தொல்லியல் துறை யிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்களை ஏற்கெனவே லக்னோ நீதிமன்றத்தில் கொடுத்துள்ளோம். அவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், முஸ்லிம் அமைப்புகள் இந்த ஆதாரங்களை ஏற்க மறுத்து, பேச்சுவார்த்தைக்கும் வர மறுத்துவிட்டன. எனவே, முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது தீர்வைத் தராது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உடனடியாக சட்டம் இயற்றி, ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றார்.
முன்னதாக, செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, “அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும். அயோத்தி, காசி, மதுரா ஆகிய புனிதத் தலங்கள் இந்துக்களுக்குச் சொந்தமானவை. சிறுபான்மையி னருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது போல, இந்து மாணவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மத மாற்றத்தைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்துக்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்து ஹெல்ப்லைனில் நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் இணைந் துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,000 டாக்டர்கள் உள்ளனர். ஏழைகளுக்கு உதவ அவர்கள் தயாராக உள்ளனர்” என்றார்.