காஞ்சிபுரத்தில் மழைநீர் வடிகால்வாய்க்காக பழமையான மரங்களை வெட்டுவதா? - மாற்று வழி கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

காஞ்சிபுரத்தில் மழைநீர் வடிகால்வாய்க்காக பழமையான மரங்களை வெட்டுவதா? - மாற்று வழி கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
Updated on
2 min read

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைப் பதற்காக நெடுஞ்சாலைத் துறை யினர் மரங்களை வெட்டி வருவ தால், நகரப் பகுதியில் மரங் களையே காணமுடியாத அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மரங் களை வெட்டாமல் திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழி இருப்ப தாகவும் அவர்கள் யோசனை கூறியுள்ளனர்.

சின்ன காஞ்சிபுரம் நகரப் பகுதி யில், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. மழைக் காலத்தின்போது இந்த சாலையின் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க முடிவு செய்து 2013-14ம் ஆண்டு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பணி தொடங்கியது. இதில், முதல் கட்டமாக காஞ்சிபுரத்திலிருந்து, செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலையின் இடதுபுறம் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 50 ஆண்டுகாலம் பழமையான 5 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

தற்போது சாலையின் வலது புறம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதனால் அப்பகுதி யில் 75 ஆண்டுகளைக் கடந்த 30-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டும் நிலை உள்ளது. அந்த மரங்கள் வெட்டப்பட்டால், நகரப் பகுதியில் மரங்களே இல்லாத நிலை ஏற்படும் என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்க தலைவர் பா.ச.மாசிலாமணி கூறியதாவது: மரங்களை வெட்டக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் நகரப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மரங்கள் வெட்டப்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது. தற்போது கால்வாய் வெட்டப்படும் நெடுஞ்சாலையில் இருந்து, 70 அடி தூரத்தில் வேகவதி நதிக்கு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது.

நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரை அதில் செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தி, ஏற்கெனவே இடதுபுறம் வெட்டப்பட்ட கால்வாயில் மழைநீர் செல்ல வழி செய்தாலே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கலாம். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மரங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, தமிழ் மக்கள் பண்பாட்டு கழக அமைப்பாளர் கோ.ரா.ரவி கூறியதாவது: ஏற்கெனவே, காஞ்சி நகரப் பகுதியில் உள்ள நான்கு ராஜவீதி, காமராஜர் சாலை, காந்திசாலை, ரயில்வே சாலை ஆகியவற்றில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மரங்களை வெட்டினால், நகரப் பகுதியில் மரங்களே இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

நெடுஞ்சாலை துறையினரால் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வைக்கப்படும் என கூறுகிறார்களே தவிர, மரக்கன்றுகள் நட்டதாக தெரியவில்லை. மரங்களை வெட்டுவதில் காட்டும் முனைப்பை நெடுஞ்சாலைத் துறையினர் மரக்கன்றுகளை நடுவதிலும் காட்ட வேண்டும். மாறாக தேசிய நெடுஞ்சாலையில் மரங்களை நட்டதாக கணக்கு காண்பிக்கின்றனர் என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்ட பொறி யாளர் கிருஷ்ணமூர்த்தி கூறிய தாவது: மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியின்போது தேவைப்பட்டால் மரங்களை வெட்டித்தான் ஆகவேண்டும். அதேநேரம், மரங்களை வெட்டாமல் பணிகளை மேற்கொள்ளவே முயற்சிக்கிறோம். ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களுக்காக, தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in