Published : 03 Jun 2017 11:53 AM
Last Updated : 03 Jun 2017 11:53 AM

சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படாது என்று வீட்டு வதசி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக் கருதி அக்கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படாது என்று வீட்டு வசதித்துறை அமைச்சரும், செயலாளரும் கூறியிருக்கின்றனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சென்னையில் விதிகளை மீறி அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்படுவதும், அவற்றுக்கு எதிர்ப்பு எழும்போது அரசுக் கணக்கில் சிறு தொகை வரன்முறைக் கட்டணமாகவும், ஆட்சியாளர்கள் கணக்கில் பெருந்தொகை கையூட்டாகவும் பெறப்பட்டு வரன்முறைப்படுத்தப்படுவதும் வாடிக்கையாகி விட்டன.

2006ஆம் ஆண்டு வரை மட்டும் சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 32,000 ஆகும். அதன்பின் கடந்த பத்தாண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டி விடும். இந்தக் கட்டிடங்களை சீரமைப்பதன் மூலம் தான் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்டது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும்.

சென்னையில் விதிகளை மீறியக் கட்டிடங்களை சீரமைப்பது சாத்தியமல்ல என்பதால் அவற்றை இடித்து விட்டு புதிதாக கட்டுவது தான் சரியானத் தீர்வாக இருக்க முடியும். ஆனால், இத்தகையத் தீர்வுக்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகத் தோன்றவில்லை. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணனிடம் இதுபற்றிக் கேட்டபோது, அவரது சார்பில் பதிலளித்த அத்துறையின் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,‘‘ விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட அனைத்துக் கட்டிடங்களையும் இடிக்க முடியாது. மாறாக, நெரிசலான பகுதிகளில் உள்ள கட்டிடங்களை நகர ஊரமைப்பு சட்டத்தின் 113 - சி பிரிவின்படி மூடி முத்திரையிட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.

இது ஏமாற்று வேலையாகும். சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட ஏராளமான கட்டிடங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் மூடி முத்திரையிடப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை அணுகி முத்திரைகளை அகற்றி பயன்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. எனவே, கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதோ, மூடி முத்திரையிடுவதோ எந்த பயனையும் ஏற்படுத்தாது. கட்டிட உரிமையாளர்களை நடவடிக்கையிலிருந்து காப்பாற்றவே உதவும்.

சென்னை தியாகராயநகரில் செய்யப்பட்டுள்ள விதிமீறல்கள் கற்பனைக்கும் எட்டாதவை. விதிகளின் படி திறந்தவெளி பரப்பளவு இடமும், பக்கவாட்டில் வாகனங்கள் சென்று வருவதற்கு தேவையான இடங்களும் ஒதுக்கப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க அதைத் தாண்டிய விதிமுறைகளும் செய்யப் படுகின்றன. உதாரணமாக பல துணிக்கடைகள் முதலில் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் கட்டப்படுகின்றன. பின்னர் அவை பக்கவாட்டில் விரிவுபடுத்தப்படுகின்றன. அதற்காக அடித்தளம் எதுவும் அமைக்கப்படுவது இல்லை.

மாறாக, ஏற்கனவே உள்ள ஓரடுக்கு அல்லது ஈரடுக்கு கட்டிடங்களின் மீது இணைப்புக் கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. அதிகபட்சமாக 2 அடுக்கு கட்டிடம் கட்ட அமைக்கப்பட்ட அடித்தளத்தின் மீது கிட்டத்தட்ட 10 அடுக்கு வரை எழுப்பப்படுவதால் அந்தக்கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழக்கூடும்.

அடுத்தக்கட்டமாக ஒரு நேரத்தில் பத்தாயிரம் பேர் வணிகம் செய்யக்கூடிய அடுக்குமாடிக்கடைகளில் மாடிகளுக்கு செல்வதற்காக ஒரு வழி, இறங்குவதற்காக ஒரு வழி என மொத்தம் இரு பாதைகள் மட்டும் தான் உள்ளன. அந்த வழிகளையும் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்காக நிறுவனங்கள், பொருட்களை அடுக்கி வைப்பதற்காக படிக்கட்டுகளை பயன்படுத்திக் கொள்கின்றன.

தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் வெளியேறும் வழிகளில் நெரிசல் ஏற்பட்டு பெருமளவில் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. இவற்றை எந்த வழிகளிலும் வரன்முறைப்படுத்த முடியாது. இக்கட்டிடங்களை இடித்து விட்டு விதிகளின்படி புதிதாகக் கட்டுவது தான் யாருக்கும் பாதிப்பில்லாத தீர்வாக அமையும்.

இதை செய்வதற்கு பதிலாக வரன்முறைப்படுத்துதல், மூடி முத்திரையிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் விதிமீறல் கட்டிடங்களைக் காப்பாற்ற தமிழக ஆட்சியாளர்கள் முயலுகின்றனர். கடந்த 2000-ஆவது ஆண்டிலிருந்தே இந்தக் கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரன்முறை என்ற ஊழல் செய்வதில் தான் தீவிரம் காட்டுகிறது.

விதிமீறல் கட்டிடங்கள் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, நீதிமன்றங்கள் தடை விதித்தது தான் அனைத்துக்கும் காரணம் என்று நீதிமன்றங்களின் மீது பழிபோட்டு தப்பிக்க முயல்கிறது தமிழக அரசு. இது முற்றிலும் தவறு. இந்நிலை நீடித்தால் ஊழலும் மவுலிவாக்கம் கட்டிட இடிபாடு, தியாகராயர்நகர் தீ விபத்துக்கள் போன்ற சோகங்களும் தொடரும். இது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எந்த வகையிலும் நல்லதல்ல.

விதிமீறல் கட்டிடங்கள் குறித்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 1971&ஆம் ஆண்டின் நகர ஊரமைப்பு சட்டத்தின் 113-சி பிரிவை அடுத்த இரு மாதங்களுக்குள் அறிவிக்கையாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது.

அதன்படி ஏப்ரல் 20&ஆம் தேதிக்குள் 113-சி பிரிவு நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மூடி முத்திரையிடப்பட்டிருக்கும். அதனால் இப்படி ஒரு விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல் தாமதப்படுத்தியதன் மூலம் சென்னை சில்க்ஸ் விபத்துக்கு அரசே பொறுப்பேற்கவேண்டும்.

சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை இடிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 24.11.2006 அன்று அளித்த தீர்ப்பில்‘‘கடந்தகால சென்னையையும், நிகழ்கால சென்னையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒட்டுமொத்த மாநகரமும் இப்போது வாழத்தகுதியற்றதாக மாறி விட்டது. மக்கள் அமைதியாக வாழட்டும்... நாடு வாழட்டும்... குறைந்தபட்ச கட்டுப்பாடாவது நிலவட்டும்’’என்று கூறியது. அதை மனதில் கொண்டு சென்னையில் விதிமீறல்களை செய்து கட்டப்பட்ட அனைத்து கட்டிடடங்களையும் இடிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துவதாக ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x