

நிலங்களுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது. இது அனைத்து வகை ஆவணங்களுக்கும் பொருந்தும். மேலும், கிரயம், பரிவர்த்தனை, தானம், குடும்ப நபர் அல்லாதவர்களுக்கான ஏற்பாடு (செட்டில்மென்ட்) ஆகிய 4 வகை ஆவணங்களுக்கு மட்டுமே பதிவுக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீத மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக பதிவுத்துறை தெளிவுபடுத்தி உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் நிலங் களுக்கான அரசின் வழிகாட்டி மதிப்பீடு, சந்தை மதிப்பைவிட அதிகமாக இருந்தது. சில குறிப்பிட்ட நகரப் பகுதிகளில் ஒவ்வொரு பதிவுக்கும் அதிகரிக்கும் சூழலும் இருந்தது. இதனால், பத்திரப்பதிவு கடுமையாக பாதிக்கப்பட்டு, அரசு வருவாயும் குறைந்தது. இதையடுத்து, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைக் குறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது.
அதன்படி சந்தை வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைக்க அரசு முடிவெடுத்தது. அத்துடன், கிரயம், பரிவர்த்தனை, தானம், குடும்ப நபர் அல்லாதவர்கள் இடையிலான செட்டில்மென்ட் ஆகியவற் றுக்கான பதிவுக் கட்டணத்தை 1 சதவீதத் தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தவும் முடிவு செய்தது. இதற்கான ஒப்புதல் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டு, அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இது நேற்று (9-ம் தேதி) முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், வழிகாட்டி மதிப்பு குறைப்பு, பதிவுக் கட்டண உயர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட சுற்றறிக்கையை பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அனைத்து சார்- பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி யுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வழிகாட்டி மதிப்பு ஜூன் 9-ம் தேதி முதல் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் உள்ள 50 பதிவு மாவட்டங்களுக்கு உட்பட்ட, அனைத்து கிராம சர்வே எண்கள், தெருக்கள், நகர்களுக்கும் பொருந்தும். மேலும், கிரயம், பரிவர்த்தனை, தானம், குடும்ப நபர் அல்லாதவர்களுக்கான ஏற்பாடு (செட்டில்மென்ட்) ஆகிய 4 வகை ஆவணங்களுக்கு மட்டுமே பதிவுக்கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவற்றை ஒரே நேரத்தில் நடை முறைப்படுத்த நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. அதன்படி, பதிவு அலுவலர் கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களைப் பொருத்து, சீரமைக்கப் பட்ட சந்தை வழிகாட்டி மதிப்பு அடிப்படை யில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். அதில் மதிப்பு குறைவாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கடந்த 1998 ஏப்ரல் 22-ம் தேதி வெளியிடப்பட்ட ஆணையின்படி, ஓர் ஆவணத்தில் வரும் உயர் மதிப்பை, அடுத்து வரும் ஆவணங்களுக்கு கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
ஆவண தாக்கல் நாளில் உள்ள வழிகாட்டி மதிப்புக்கு குறைவான மதிப் பில் ஆவணங்கள் பதிவு செய்யப் பட்டிருந்தால், புதிய வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் 9-ம் தேதிமுதல் பதிவு செய்யப் படும் ஆவணங்களுக்கு, அதற்கு முந்தைய பதிவை கருத்தில்கொண்டு பதிவு செய்வதை சார்-பதிவாளர்கள் தவிர்க்க வேண்டும்.
கட்டிடங்களைப் பதிவு செய்யும்போது, முந்தைய ஆவணப்பதிவில் உள்ள கட்டிட மதிப்பையே கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆவணதாரர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. நடைமுறையில் உள்ள பொதுப்பணித் துறை தளவிலைப் பட்டியலின்படி மதிப்பை கடைபிடிக்க வேண்டும்.
கடந்த ஜூன் 8-ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு மதிப்பு நிர்ணயத்துக்கு நிலுவையில் உள்ள ஆவணங்களுக்கு பழைய வழிகாட்டி மதிப்பு அடிப் படையி லேயே மதிப்பு நிர்ணயிக்க வேண்டும்.
சீரமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப் பானது இணையதளத்தில் ஜூன் 8-ம் தேதியில் உள்ள மதிப்பில் 33 சதவீதம் குறைவாக நடைமுறைப்படுத்த வேண் டும். ஏற்கெனவே முரண்பாடுகள் களையப் பட்டு, அல்லது மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, அந்த மதிப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டிருக் கலாம். அவ்வாறு விடுபட்டிருந்தால், சார்-பதிவாளர்கள் அதுதொடர்பாக மாவட்டப் பதிவாளர் வாயிலாக சீரமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை பதிவுத்துறை தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். அதன்பின் இணையதளத்தில் உரிய மதிப்பு மாற்றம் செய்யப்படும்.
உடன்படிக்கை ஆவணம்
ஒரு சொத்து தொடர்பாக உடன்படிக்கை (புரிந்துணர்வு ஒப்பந்தம்) அமலில் இருந்தால், அந்த சொத்தின் வழிகாட்டி மதிப்பு, சீரமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பைவிட அதிகமாக இருந்தால், உடன்படிக்கை ஆவணத்தில் உள்ள மதிப்பையே சந்தை மதிப்பாக கருத்தில் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வரும் முன்போ, பின் னரோ உடன்படிக்கை ரத்து செய்யப் பட்டிருந்தால், அந்த ஆவணத்தில் உள்ள மதிப்பை கடைபிடிக்க ஆவணதாரர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது.
இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதாகைகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். பதிவு செய்ய வரும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் 13-ம் தேதி வரையிலான ஆவணப் பதிவுகளுக்கு முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணங்களை சார்-பதிவாளர்கள் உச்சவரம்பின்றி ரொக்கமாக வசூலிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொது அதிகாரத்துக்கு பொருந்தாது
பதிவுக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது விற்பனை, பரிமாற்றம், தானம், செட்டில்மென்ட் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி, பொது அதிகாரம், கட்டுமான ஒப்பந்தம், திருத்தல் உள்ளிட்ட இதர பதிவுகளுக்கான பதிவுக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரம், குறைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பானது பதிவுக்கு தாக்கலாகும் அனைத்து வகை ஆவணங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வித்தியாசம் இல்லை
வழிகாட்டி மதிப்பைக் குறைத்து, பதிவுக் கட்டணத்தை அதிகரித்துள்ளதால், பதிவுக்காக செலவழிக்கும் தொகையில் பெரிய வித்தியாசம் இல்லை. உதாரணமாக, இதற்கு முன்பு, 100 சதுரஅடி நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு ரூ.4 லட்சமாக இருந்தால், அதை விற்கும் போது, முத்திரைக் கட்டணம் 7 சதவீதம், பதிவுக் கட்டணம் 1 சதவீதம் என மொத்தம் 8 சதவீதம், அதாவது ரூ.32 ஆயிரம் செலுத்த வேண்டும்.
தற்போது வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால், அதே 100 சதுரஅடி நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு ரூ.2 லட்சத்து 68 ஆயிரமாகக் குறையும். இதை விற்கும்போது, முத்திரைக் கட்டணம் 7 சதவீதம், உயர்த்தப்பட்ட பதிவுக் கட்டணம் 4 சதவீதம் என மொத்தம் 11 சதவீதம், அதாவது ரூ.29 ஆயிரத்து 480 செலுத்தவேண்டும்