Last Updated : 16 Jun, 2017 11:20 AM

 

Published : 16 Jun 2017 11:20 AM
Last Updated : 16 Jun 2017 11:20 AM

மத்திய அரசு உத்தரவு எதிரொலி: வற்றிய கறவை மாடுகளை விலைக்கு வாங்குமா கேரள மில்மா நிறுவனம்? - கோழிக்கோடு பொதுக்குழுவில் வலியுறுத்த திட்டம்

மாடுகளை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து வற்றிய கறவை மாடுகளை மில்மா (கேரள மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம்) நிறுவனமே விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கேரள பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் ‘ஆவின்’ போல் கேரளத்தில் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து சந்தைப்படுத்தி வருவது ‘மில்மா’. இதன் கீழ் திருவனந்தபுரம் மில்க் யூனியன், எர்ணாகுளம் மில்க் யூனியன், மலபார் மில்க் யூனியன் என மூன்று மண்டலங்கள் இயங்கி வருகின்றன. தினசரி தேவையான சுமார் 12 லட்சம் லிட்டர் உற்பத்தியான கேரளத்தின் மொத்த பால் உற்பத்தியில், 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை பாலக்காட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் மலபார் மில்க் யூனியனின் 1137 மில்மா பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செய்து வருகின்றன.

இந்த கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் ஆண்டு தோறும் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 17) கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மலபார் மில்க் யூனியனின் வரவு செலவு அறிக்கையை கூட்டுறவுச் சங்கங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது ஒன்றிய அலுவலகம்.

இதையொட்டி மாவட்டந்தோறும் கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் மற்றும் மில்மா யூனியன் அலுவலர்கள் பங்கேற்ற முன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பாலக்காடு கோட்டை மைதானம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த பாலக்காடு மாவட்ட கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், பால் கொள்முதல் மற்றும் விற்பனை விவகாரத்தை விட மாடுகள் இறைச்சிக்கு விற்கக்கூடாது என்ற மத்திய அரசு உத்தரவு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதையே, பொதுக்குழு கூட்டத்தில் கோரிக்கையாக வைக்க உள்ளதாக இதில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அட்டப்பாடி பாலூர் மில்மா கூட்டுறவு சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கேரளாவை பொறுத்தவரை தரத்துக்கு ஏற்ப ஒரு லிட்டர் பால் ரூ. 34-க்கு விவசாயிகளிடம் சங்கங்கள் வாங்குகின்றன. மில்மா லிட்டருக்கு ரூ. 35.50 வரை விலை கொடுக்கிறது. மார்க்கெட்டில் லிட்டர் ரூ. 42-க்கு பாக்கெட் செய்து விற்கிறது. மில்மா அளிக்கும் தொகையில் வரும் உபரி ரூ. 1.50 மட்டுமே கூட்டுறவுச் சங்கங்கள் செலவினங்களுக்கு பயனாகிறது. மில்மா சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு புண்ணாக்கு, தவிடு போன்றவை இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பங்குபோட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு டிவிடெண்டாகவும் வழங்குகிறது.

இந்நிலையில், கறவை வற்றிய மாடுகள், காளைக் கன்றுகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்ற மத்திய அரசு உத்தரவால் பால் உற்பத்தித் தொழில் கேள்விக்குறியாகி உள்ளது. இவற்றை இறைச்சிக்கென கொடுப்பதன் மூலமாகவே மாடு வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு சாத்தியமாகி வருகிறது. அது இல்லாமல் போனால், மாடு வளர்த்த முடியாது. அப்படி வளர்த்து, பால் உற்பத்தியில் ஈடுபடவேண்டுமானால் கறவை வற்றிய மாடுகள் மற்றும் பயன்படாத காளை கன்றுகளை மில்மாவே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதே கோரிக்கை பல ஒன்றியங்களில், மாவட்டக் கூட்டங்களில் ஒலித்திருப்பதால், பொதுக்குழுவிலும் இது பிரதானமாக விவாதிக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் லிட்டர் ரூ. 25-க்கு வாங்கி, ரூ. 40-க்கு விலைக்கு விற்கும் ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டக் கணக்கை காட்டி வருகிறது. ஆனால், கேரளா மில்மா ரூ.34-க்கு விவசாயிகளிடம் பாலை வாங்கி, ரூ. 42-க்கு விற்று நல்ல லாபம் காட்டியுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு ரூ.35.22 கோடிக்கு பால் கொள்முதல் செய்து, ரூ. 45.69 கோடிக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்து ரூ. 10.47 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலபார் யூனியன் மில்மா பால் உள்ளிட்ட 12 பால் பொருட்கள் எந்த அளவு தயாரித்து விற்பனை செய்துள்ளது என்பதையும், அதன் மூலம் வந்துள்ள வருவாயும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விவரம் (சராசரியில்):

பால் கொள்முதல் மற்றும் விற்பனை ஒரு நாளைக்கு 49,02,073 லிட்டர்.

நெய் உற்பத்தி ஒரு மாதத்துக்கு 19,09,201 கிலோ.

தயிர் ஒரு நாளைக்கு: 61,487 லிட்டர்.

கப் தயிர் மாதந்தோறும்: 8,949 கிலோ.

சம்பாரம் எனப்படும் மோர்: 49,649 லிட்டர்.

மில்மா கூல்டிரிங் (மாதம்): 54, 850 பாட்டில்.

ஐஸ்கிரீம் (மாதம்): 1, 07, 717 லிட்டர்.

சிப்பக்கூடு ஐஸ்பதி (மாதம்): 34, 508 பாக்கெட்,

மில்மா லோலி- மிட்டாய் (மாதம்): 3, 35, 305

பாலாடா மிக்ஸ்- பாயச மிக்ஸ் (மாதம்): 7,188 கிலோ.

குலாப்ஜாமூன் டின் (மாதம்): 3,480 டின்கள்

குக்கிங் பட்டர் (மாதம்) : 25, 186 கிலோ.

பன்னீர் (மாதம்): 1219 கிலோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x