Published : 11 Dec 2013 03:06 PM
Last Updated : 11 Dec 2013 03:06 PM

சாதி மோதல்களைத் தூண்டுவோருக்கு ஜெயலலிதா எச்சரிக்கை

தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டும் சமூக விரோத சக்திகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.



முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு வரும் 13-ஆம் தேதி வரை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டின் முதல் நாளான இன்று, துவக்க உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஒரு முழுமையான நிலையை அடைந்திருக்கிறது. ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், மிகவும் பலவீனமான பிரிவினருக்காகவும் அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. தமிழகம் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது.

சட்டம் - ஒழுங்கில் திருப்தி...

காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்தத் தடைகளையும் விதிக்காமல் முழு அளவில் சுதந்திரமான நிலையை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதால், சட்டம் - ஒழுங்கை பொறுத்தவரை தமிழகம் பெருமைமிகு மாநிலமாகவும், திருப்தி கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.

தமிழ்நாடு சாதி - மத மோதல் இல்லாத மிகப்பெரிய மாநிலமாக விளங்குகிறது. இடதுசாரி தீவிரவாதம் மற்றும் மத ரீதியிலான வன்முறைகள் எங்கும் கிடையாது. சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு விஷயத்தில் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதித்ததன் மூலம் இந்த சாதனை நிகழ்த்த முடிந்தது.

தமிழ்நாட்டில் சாதி மோதல்களை தூண்டி பதட்டத்தை உருவாக்க யார் காரணமாக இருந்தாலும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட சமூக விரோதி சக்திகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இரும்புகரம் கொண்டு அடக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையொட்டியுள்ள கேரளா, கர்நாடகம், ஆந்திரா எல்லைகளில் ஓய்வு இல்லாத கண்காணிப்பு நக்கலைட்டுகள் பற்றிய உளவு துறையின் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் இடதுசாரி தீவிரவாதம் தலை காட்ட முடியாமல் ஒடுக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர் பிரச்சினை...

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக, நமது பாரம்பரிய பாக் நீரினைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது தமிழக மீனவர் சமுதாயத்தில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனை தடுத்து நிறுத்துமாறு பிரதமருக்கு பலமுறை தாம் கடிதம் எழுதினேன்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், கடந்த 1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை மீட்பது ஒன்றே இலங்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முடியும். பிரதமருக்கு பலமுறை நான் கடிதம் எழுதினேன். இதுதொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதை ஒரு கொள்கையாக கொண்டுள்ளது. அதற்காக நான் மேற்கொண்ட முயற்சியால், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலின வன்கொடுமைகளை தடுப்பதற்காக 13 அம்ச திட்டத்தை அறிவித்துள்ளதால், மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிக அளவில் நடைபெற்று வரும்போது, பெண்களுக்கு எந்தவிதக் கொடுமையும் நிகழாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

தமிழ்நாடு அரசு ஏ‌‌ழைக் குடும்பங்களுக்கு விலையில்லாமல் வழங்கியுள்ள கறவைமாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்படாமலும், விலங்குகளுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்படாமலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிப்பதோடு, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் உரியவர்களை சென்றடைகிறதா என்பதையும் அவர்கள் கண்காணித்து வரவேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் கடைகளை தேவையான இடங்களில் தொடங்க வேண்டும். மாநில அரசு, கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி முடித்ததன் மூலம், அவற்றின் செயல்பாடுகளை ஜனநாயகப்படுத்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனை புரிந்திருக்கிறது.

கடந்த 1982-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கிய சத்துணவுத்திட்டம் போல ஏழைகளுக்கு சத்துணவு வழங்கும் வகையில் நான் துவக்கிய அம்மா உணவகம் என்பது புரட்சிகரமான சிந்தனை. ஏழை - எளிய மக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் நோய்கள் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எழுத்தறிவின்மை இல்லாத மாநிலம்...

நலிந்த பிரிவினர் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எழுத்தறிவு அடிப்படையில் பாலின இடைவெளி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எழுத்தறிவின்மை இல்லாத நிலையை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகியோரின் கல்வி மேம்பாட்டிற்கான அரசின் திட்டப் பயன்கள் அவர்களுக்கு சென்றடையும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் செயல்படவேண்டும்.

தமிழகத்தின் முன்னோடித் திட்டமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள், ஏழை குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இவை, முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பதோடு, அவற்றின் பராமரிப்பு சேவையையும் உறுதிப்படுத்தவேண்டும்.

தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளில் குறிப்பாக, தென் மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியை விரிவுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முந்தைய 2 மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து, கடந்த 2011-ம் வருடத்திய மாநாட்டின் முடிவில், 81 குறிப்பிட்ட அறிவிப்புகளையும், 2012-ல், 346 அறிவிப்புகளையும் வெளியிட்டேன்.

சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் அடங்கிய விரிவான, விளக்கமான நிகழ்ச்சி நிரல், முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது ஆக்கப்பூர்வமான கருத்துகளை இதில் நான் எதிர்பார்க்கிறேன்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x