Published : 25 Jun 2016 08:56 AM
Last Updated : 25 Jun 2016 08:56 AM

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழுக்கு இருக்கை: சென்னையில் இன்று முப்பெரும் விழா

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக் கும் முயற்சி நடைபெற்று வரு கிறது. அதைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் விதமாக தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு முப்பெரும் விழா நடக்கிறது.

இந்த விழா தொடர்பாக தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினர் டாக்டர் விஜய் ஜானகிராமன், இந் திய ஒருங்கிணைப்பாளர் முனை வர் எம்.ஆறுமுகம், தமிழறிஞர் எஸ்.ராமலிங்கம் ஆகியோர் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப் போது எம்.ஆறுமுகம் கூறிய தாவது:

யோகா பற்றி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப் பட்ட ஆய்வு முடிவுகள் அதை அறிவியல்பூர்வமான கலையாக அடையாளம் காட்டியது. ஹார்வர் டில் கிடைத்த அங்கீகாரத்துக்குப் பிறகே யோகா உலகம் முழு வதும் கொண்டாடப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. தமிழ் மொழி யின் பெருமையைப் பற்றி நாமே சொல்வதைவிட தமிழ் சிறந்த மொழி, அதன் இலக்கியங்கள் உலகத்தரமானவை என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவிக்கும்போது, அதற்கு உலக அரங்கில் கவனம் கிடைக்கும். இதற்காகவே ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் விஜய் ஜானகிராமன் கூறும்போது, “தமிழ் இருக்கை அமைக்க இரண்டு ஆண்டுகள் அவகாசத்தில் 40 கோடி ரூபாயை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு நாம் செலுத்தவேண்டும். அதில் 6 கோடி ரூபாயை நானும் சக மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தமும் இணைந்து வழங்கியிருக்கிறோம். இதுவரை 10 கோடி ரூபாய் சேர்ந் திருக்கிறது. இன்னும் 30 கோடி ரூபாய் தேவை. இதைத் தமிழர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கும் ஒரு இருக்கையாக உருவாக்கி வருவதால் தமிழகத் தில் வாழும் தமிழர்களும் அதிக அளவில் பங்களிக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், தமிழகத்தில் நிதி திரட்டி வருவதை அறிமுகப் படுத்தும் விழாவாகவும், தமிழ் இருக்கை கீதம் வெளியீட்டு விழா வாகவும் ‘சென்னையில் தமிழன் னைக்கு முப்பெரும் விழா’ என்ற தலைப்பில் நாளை (இன்று) நடத்துகிறோம். இந்த விழாவுக்குத் தமிழர்கள் அனைவரும் திரண்டு வரவேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ஆவன செய் யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த அரசின் பெரும் பங்கும் இதில் அமையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.

தமிழறிஞர் எஸ்.ராமலிங்கம் கூறும்போது, ‘தி இந்து’ நாளிதழ் குழுமத்தின் தலைவர் என். ராம் தலைமையேற்கும் இந்த நிகழ்ச் சியில் விகடன் குழுமத் தலை வர் பா.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள் கிறார். நீதிபதிகள் சந்துரு, கிரு பாகரன், சுந்தரேஷ், நடிகர் சிவகுமார், எழுத்தாளர் எஸ். ராம கிருஷ்ணன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் அதிகாரபூர்வ கீதம் குறுந் தகடாகவும் காணொளியாகவும் நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. அந்தப் பாடலுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் தாஜ்நூர், பாடலை எழுதிய கவிஞர் பழநிபாரதி, பாடலைப் பாடிய டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், நித்ய மகாதேவன் ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்” என்றார்.

நன்கொடை அளிப்பது எப்படி?

தமிழகத்தில் வாழும் தமிழர் கள் நன்கொடை அளிக்க விரும்பி னால் எந்தெந்த வழிகளில் அதைச் செலுத்தலாம் என்ற கேள்விக்கு, இதற்கென்றே உருவாக்கப் பட்டிருக்கும் harvardtamilchair.com என்ற இணையதளத்தில் இதுகுறித்த விவரங்களும் வழி முறைகளும் இருப்பதை டாக்டர் எம்.ஆறுமுகம் விளக்கினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x