

நரிப்பையூரில் 2006-ம்ஆண்டில் நிறுத்தப்பட்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக்கோரிய மனுவை பரிசீலித்து ஒரு மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கிடாத் திருக்கையைச் சேர்ந்த எம்.பிரபு உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
சென்னை மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் தினமும் 2.5 மில்லியன் பேருக்கு நூறு மில்லியன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் சென்னை மெட்ரோ பாலிடன் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 2007-ம் ஆண்டிலிருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது பரவலாக காணப்படும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் மாற்று திட்டமாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திகழ்கிறது.
கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுக்கும் மேலாக வறட்சி நிலவுகிறது. இந்த மாவட்டத்தில் விவசாயம் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கும், குடிநீருக்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை நம்பி இருந்தனர்.
தற்போது அந்த திட்டத்திலும் போதிய நீர் இல்லாததால் நிலையில், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் ஜாதி மோதலுக்கு காரணமாக அமைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 1993-ம் ஆண்டில் நரிப்பையூர் கிராமத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி தாலுகாக்களை சேர்ந்த 290 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கடல் நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
இந்த சூழலில் கடந்த 2006-ம் ஆண்டில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை மீண்டும் நிறைவேற்றக்கோரி பல மனுக்கள் அனுப்பியும் பலனில்லை. எனவே, நரிப்பையூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக மனுதாரர் அளித்த மனுவை ஒரு மாதத்தில் பரிசீலித்து மத்திய கடல்நீர் சுத்திகரிப்பு திட்ட இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.