Published : 24 Jan 2017 05:55 PM
Last Updated : 24 Jan 2017 05:55 PM

மாணவர்களின் போராட்டத்தை கையாளத் தவறிய டிஜிபி, சென்னை காவல் ஆணையரை இடமாற்றம் செய்க: ஸ்டாலின்

மாணவர்களின் போராட்டத்தை முறையாக கையாளத் தவறிய சென்னை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், உளவுத் துறை தலைவர், மாநகர உளவுத் துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 17-ம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அமைதியாக நடந்து இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது.

ஆனால், அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல் துறையினர் கண்ணை மூடிக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வழிகாட்டல் இல்லாத அதிமுக அரசின் நிர்வாகத் தலைமையின் கீழ் காவல்துறை செயல்படுகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல் துறையினரே வன்முறையில் ஈடுபடும் காட்சிகள், முறையான வழிகாட்டும் தலைமை இன்றி மாநகர, மாநில காவல்துறை தவிப்பதையே காட்டுகிறது. அதிமுக ஆட்சியில் காவல் துறை எந்த அளவுக்கு சீர்குலைந்து நிற்கிறது என்பதை இந்த நிகழ்வுகள் வெளிக்கொண்டு வந்துள்ளது.

மாலையில் சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேறும் சூழலில், காலையில் அவசரஅவசரமாக கூட்டத்தை கலைக்க வேண்டிய அத்வசியம் எதுவும் இல்லை.

போராட்டக்காரர்களை 7 நாள்கள் அன்புடன் காத்து நின்ற காவலர்களை வைத்தே இவ்வளவு பெரிய தாக்குதலை அதிமுக அரசு நடத்தியிருப்பதை ஜனநாயக நாட்டில் ஏற்க முடியாது.

தமிழ் உணர்வுகளுக்காக, தமிழ் பண்பாட்டுக்காக போராடியவர்களை தேச விரோதிகள், சமூக விரோதிகள் என சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அறப்போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்றால் 7 நாள்களும் காவல் துறையினர் என்ன செய்தார்கள்?

மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி தமிழர்களின் பண்பாட்டு, கலாச்சார உரிமையை வென்று விட்டார்கள் என்ற உண்மையை மறைப்பதற்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அபாண்டமாக குற்றம்சாட்டி போராட்டத்தின் உன்னனத திசை திருப்பும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

எனவேதான் இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என ஆளுநரிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அமைதியான போராட்டத்தை முறையாக கையாளத் தவறிய டிஜிபி, உளவுத் துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர், மாநகர உளவுத் துறை அதிகாரி உள்ளிட்டோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தடியடி நடைபெற்ற இடங்கள், ஜஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீ வைப்பு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x