

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரத்தில் இருந்து நீரோடி வரையிலான பரந்து விரிந்த கடல் பரப்பில் தொன்றுதொட்டே கடல் விவசாயம் அமோகம். மீன்பிடித் தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள், 1975 வரை நாட்டுப் படகுகளையே பயன்படுத்தினர்.
பின்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பங்குத் தந்தை ஜிலேவின் முயற்சியால் முட்டத்தில் முதன் முதலாக பைபர் படகு கட்டுமானப் பயிற்சிக் கூடம் உருவானது. இதன் காரணமாக, எடை குறைவான பைபர் படகுகளில் இயந்திரங்கள் மூலம் கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்கள் மத்தியில் ஆர்வம் மிகுந்தது.
நாளடைவில் ரூ. 60 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை மதிப்புள்ள விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் கைகொடுத்தன. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்நிலையில் மீன்பிடி வருமானத்தில் எரிபொருள் செலவை ஈடுசெய்ய முடியாததால் விசைப்படகுகளுக்கு மாற்றாக, மீண்டும் பைபர் படகுகளை மீனவர்கள் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 25-க்கும் மேற் பட்ட பைபர் படகு கட்டும் தொழிற்கூடங்கள் உள்ளன. 32 அடி வரை நீளம் உள்ள பெரிய பைபர் படகு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் விலையுடையது. 20 அடியில் இருந்து தொடங்கும் சிறிய பைபர் படகுகள் ரூ.80 ஆயிரத்தில் இருந்தே கிடைக்கின்றன. நடுத் தர குடும்பத்தைச் சேர்ந்த மீனவர் களுக்கு இவற்றை கையாள்வது எளிதாகிறது.
கடியப்பட்டிணத்தில் பைபர் படகு கட்டும் தொழில் செய்து வரும் லீனஸ் பிராங்ளின் கூறும்போது, ‘முழுவதும் பைபரை கொண்டு வடிவமைக்கப்படுவதால் இப்படகுகள் கனம் குறைவாக காணப்படும். 7 நாட்களுக்குள் ஒரு பைபர் படகை தயாரிக்கலாம். இதற்கான உபகரணங்கள் கோவை யில் உற்பத்தியாகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பைபர் படகு களுக்கு, பிற மாவட்டங்களிலும் நல்ல மவுசு உள்ளது. குறிப்பாக மீன்பிடித் தடைக்காலங்களான ஏப்ரல் 15 முதல் மே 30 வரையும், ஜூன், ஜூலை மாதங்களிலும் புதிய படகுகள் ஆர்டரும், பழைய படகுகளுக்கான பழுது பார்க்கும் பணியும் அதிகமாக வரும். இத்தொழிலை ஊக்குவிக்க அரசு உதவி செய்யவேண்டும்’ என்றார்.
மன மாற்றம்
விசைப்படகுகளைப் பொறுத்தவரை அதன் விலை, பராமரிப்புச் செலவு, எரிபொருள் செலவு எல்லாமும் அதிகம். விசைப்படகில் கடலுக்குச் சென்று வெறுங்கையுடன் திரும்ப நேர்ந்தால் மீனவர்களுக்கு நஷ்டம்தான் மிஞ்சும். எனவே, பைபர் படகுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மாதம் 500 படகுகள் இம்மாவட்டத்தில் உற்பத்தியாகின்றன’ என்றார்.
பாதுகாப்பு வேண்டும்
பைபர் படகு கட்டும் தொழிலில் 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் கொட்டில்பாடு டார்வின் கூறும்போது, `பைபர் படகுத் தயாரிப்பு பணி அதிகமாக நடப்பதால் தினமும் வேலை உள்ளது. ரூ. 700 வரை தினக்கூலி கிடைத்தாலும் இத்தொழிலை தொடர்ந்து செய்வோருக்கு சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. பைபர்களை அடுக்கடுக்காக ஒட்டி ஒன்றுசேர்க்க பயன்படுத்தப்படும் கெமிக்கல் உடல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது புகை பிடித்தலை விட ஆபத்தானது. வெளிநாடுகளில் இத்தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு நல்ல பாதுகாப்பு உள்ளது. ஆனால், இங்கு பைபர் படகு கட்டும் தொழிலாளர்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. எங்களின் உடல் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு முன் வர வேண்டும்’ என்றார்.