Published : 03 Jun 2016 08:52 AM
Last Updated : 03 Jun 2016 08:52 AM

மக்களாட்சிக்கு விரோதமான சக்திகளை தடுக்க வேண்டும்: கருணாநிதி பிறந்தநாள் செய்தி

நமது சமுதாய - அரசியல் கட்டமைப்பில் ஊடுருவியுள்ள மக்களாட்சிக்கு விரோதமான சக்திகளை தடுத்து நிறுத்த இளைஞர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

தனது 93-வது பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "சட்டமன்றத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்தத் தூண்கள், எத்தகைய தூய்மையான நோக்கங்களைத் தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி, சவால்களை எதிர் நோக்கி உள்ளன.

சோதனைகளில் வென்று, புடம் போட்ட பொன்னாக மிளிர வேண்டிய அந்தத் தூண்கள், துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றின் பெறுமானமும் (Value) சரியத் தொடங்கி விட்டது.

அதற்குக் காரணம், மக்களாட்சிக்கு விரோதமான சக்திகள், நமது சமுதாய - அரசியல் கட்டமைப்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி, உருக்குலைத்து வருகின்றன என்பது தான்.

இந்த எதிர்மறைப் பாதிப்பை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்தி, மக்களாட்சியின் நான்கு தூண்களினுடைய நல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், ஜனநாயக - சோஷலிச - சமயச் சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு, ஆழ வேரூன்றிச் செல்வாக்கு பெறவும், நமது நாட்டின் இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய, உறுதி மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x