

விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.65 லட்சம் மோசடி செய்த 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை கிளையில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயிர்க் காப்பீடு செய்து விவசாயிகள் அதற்கான பிரீமியம் கட்டணத்தை வங்கி வரைவோலையாக அனுப்பினர். இவற்றை அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பதிவறை எழுத் தர் ஜி.சக்கரபாணி சட்டவிரோதமாக திருடி, அந்த வரை வோலைகளை போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் போலியான கணக்கு தொடங்கி கல்யாணசுந்தரம், எம்.சாலை குணதங்கம் ஆகியோருடன் சேர்ந்து கையாடல் செய்ததாக புகார் கூறப்பட்டது.
சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனுப்பிய 15 வரைவோலைகள் மோசடியாக பணமாக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.65 லட்சம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த மோசடி குறித்து விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் சி.அன்பரசு, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரி களிடம் புகார் செய்தார். பின்னர் மோசடியில் ஈடுபட்டதாக சக்கரபாணி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் 2010-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.
4 ஆண்டு சிறை
இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜவஹர் நேற்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜி.சக்கரபாணிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், சாலை குணதங்கத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.18 ஆயிரம் அபராதமும், கல்யாணசுந்தரத்துக்கு 4 ஆண்டு சிறை தண் டனையும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.