

சமுதாய நலனுக்காக தொண்டாற்றியவர்கள் 'முதல்வர் மாநில இளைஞர் விருது' பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு 'முதல்வர் மாநில இளைஞர் விருது' வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் வழங்குவார். விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கம், பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவை வழங்கப்படும்.
சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டற்றியுள்ள சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 4 நகல்களுடன் எண்.30, கிழக்கு கிளப் சாலை, செனாய் நகர், சென்னை-30 என்ற முகவரியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.பிரேம்குமாரிடம் வரும் 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 7401703480 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்'' சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.