Published : 19 Apr 2017 07:40 AM
Last Updated : 19 Apr 2017 07:40 AM

‘நீட்’ தேர்வு ரத்து கோரிக்கை வலியுறுத்தப்படுவதால் முழு அடைப்பு போராட்டத்துக்கு மாணவர், பெற்றோர் ஆதரவு தரவேண்டும்: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேண்டுகோள்

அனைத்துக் கட்சி சார்பில் 25-ம் தேதி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்யும் கோரிக்கையும் வலியுறுத்தப்படுவதால், போராட் டத்துக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் ஆதரவு தரவேண்டும் என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கூறினார்.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதா, சட்டப்பேரவையில் பிப்ரவரி 1-ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் பொதுவாக நடத்தப்படும் தேர்வுக்கு தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சமீபத்தில் தெரி வித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் பேசிய தாவது:

2 சதவீதத்தினர் மட்டுமே..

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன்: தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 98 சதவீத மாணவர்கள் சமச்சீர் கல்வி படிக்கின்றனர். 2 சதவீதத்தினர் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கின்றனர். மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய 98 சதவீதம் பேரை மத்திய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதச் சொல்வது நியாயமல்ல.

சமச்சீர் கல்வியில் குறை இருந்தால் அதை சரிசெய்ய வேண்டுமே தவிர, அதற்கு நுழைவுத்தேர்வு தீர்வாகாது. மேலும் இது மாநில உரிமை யைப் பறிக்கும் செயல். நீட் தேர்வு பயிற்சி மையங்களில் ரூ.80 ஆயிரம் கட்டணம் வாங்கப்படுகிறது. ஏழை மாணவர்களால் இவ்வளவு தொகை செலுத்தி படிக்க முடியாது. நீட் தேர்வால் சாதாரண மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு குறையும். எனவே, மத்திய அரசு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்துக் கட்சி சார்பில் 25-ம் தேதி நடத்தப்படும் முழு அடைப்பில் நீட் தேர்வு ரத்து கோரிக்கையும் உள்ளது. எனவே ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இப் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும். ஜல்லிக்கட்டுக்குப் போராடியதுபோல, நீட் தேர்வு ரத்தாகும் வரை ஒன்றுபட்டு போராட வேண்டும்.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு: நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை மத்திய சுகாதார அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அந்த பாதிப்பில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். குஜராத் முதல்வராக இருந்தபோது நுழைவுத்தேர்வை எதிர்த்த மோடி, இப்போது பிரதமரானதும் ஆதரிக் கிறார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் கிரமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்களே இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத் தலைவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணம், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் மாநிலத் தலைவர் ரத்தினசபாபதி, மாணவர் பெற்றோர் நலச்சங்க பொருளாளர் ச.ஜாகீர் உசேன் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x