Last Updated : 19 Aug, 2016 10:35 AM

 

Published : 19 Aug 2016 10:35 AM
Last Updated : 19 Aug 2016 10:35 AM

5 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆய்வகங்களில் சிறப்பு பரிசோதனைகள் நிறுத்தம்

வெளிநோயாளிகள் பரிசோதனை செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாலும், சிறப்புப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டதாலும் தமிழகத்தில் 5 மாவட்ட அரசு தலைமை மருத் துவமனைகளின் ஆய்வகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்துள்ளது.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்பட்ட தமிழ்நாடு சுகாதார திட்டத்தில் மருத்துவத் துறையில் நிரந்தரப் பணியாளர்களைக் குறைத்து, தனியார் மூலம் சேவை வழங்கும் திட்டம் கொண் டு வரப்பட்டது. அதன்படி ராம நாதபுரம், விருதுநகர், திருப்பூர், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்ட அரசு தலைமை மருத் துவமனைகளின் ஆய்வகங்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியா ரிடம் விடப்பட்டன.

இந்த மருத்துவமனைகளில் பணியாற்றிய அரசு ஆய்வக நுட்புநர்கள் மாவட்டத்தில் உள்ள வேறு அரசு மருத்துவ மனைகள் அல்லது வெளிமாவட்ட மருத்துவமனைகளுக்கு மாற்றப் பட்டனர். கடந்த 2013 மார்ச்சில் சென்னையைச் சேர்ந்த 'ஹைடெக் லேபாரெட்டரீஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம் 5 மருத்துவமனை ரத்தப் பரிசோதனை ஆய்வகங்கள் ஒப்படைக்கப்பட்டன.

மருத்துவத்துறை ஒரு மருத்து வமனைக்கு மாதத்துக்கு ரூ.2.5 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் நிதி மட்டும் வழங்கப்ப டும் என தனியாரிடம் ஒப்பந்தம் செய்தது. இத்திட்டம் தொடங்கிய சில மாதங்களில் மாதத்துக்கு ரூ.2.5 லட்சத்துக்குள் பரிசோதனைகள் செய்ய முடியவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் கூடுதல் நிதி தேவைப்பட்டது. தொடங்கிய 8 மாதங்களில் ஒவ்வொரு மருத்து வமனைக்கும் ரூ.40 லட்சத்துக்கு மேல் செலவிடப்பட்ட நிதியை தனியாருக்கு வழங்காமல் அரசு நிலுவையில் வைத்துள்ளது.

உயிரிழப்பு அதிகம்

அதனையடுத்து ஒரு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு ரூ.8 ஆயிரத்துக்குள் மட்டுமே பரிசோதனைகளைச் செய்யத் தொடங்கியது தனியார் நிறுவனம். அதற்கு மேல் வரும் நோயாளி களைத் திருப்பி அனுப்புவதும், அடுத்த நாட்களில் வரச் சொல்லி அலைக்கழிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நோயாளிக ளுக்கு சிறப்புப் பரிசோதனை களான லிபிட் புரோபைல் (கொழுப்பு பரிசோதனை) மஞ்சள் காமாலை, கல்லீரல் சோதனை, டெங்கு, கார்டியாக் புரோபைல் (இதய பரிசோதனை) உள்ளிட்ட பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன.

இம்மருத்துவமனைகளில் தற் போது சர்க்கரை, உப்பு, ரத்த அளவு, ரத்த அணுக்கள் ஆகிய பரிசோதனைகள் மட்டும் செய்யப் படுகின்றன. அதனால் பெரும் பாலான நோயாளிகள் முக்கிய நோய்கள் கண்டறியப்படாமல் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

சில நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வ தும், சிலர் நோயின் தன்மையே தெரியாமல் பக்கவாதம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் சப்த மில்லாமல் நடக்கிறது. மொத்தத் தில் இத்திட்டம் அரசுக்கு தோல் வியை ஏற்படுத்தி உள்ளது. இருந் தும் மருத்துவத்துறை அதிகாரி கள் இதைக் கண்டுகொள்ளாமல் உள்ளனர். உடனடியாக அரசு நடவ டிக்கை எடுத்தால்தான் 5 மாவட்ட அரசு மருத்துவமனை களுக்கு வரும் ஏழை நோயாளி களுக்கு உண்மையான சிகிச்சை கிடைக்கும் என நோயாளிகள் தெரிவித்தனர்.

40 சதவீதமாகக் குறைவு

தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க மாநில பொதுச் செயலாளர் வி.பார்த்த சாரதியிடம் கேட்டபோது, ''உலக வங்கி நிர்ப்பந்தத்தால், 5 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆய்வகங்களை அரசு தனியாரி டம் விட்டது. 2012-ல் அரசாணை வெளியிட்டதில் இருந்து 2013-ல் இத்திட்டம் தொடங்கும் வரை பல்வேறுகட்ட போராட்டம் நடத்தி னோம். திட்டம் தொடங்கிய சில மாதங்களில் தோல்வியடைந்தது.

கட்டணம் அதிகம் என்பதால் சிறப்புப் பரிசோதனைகளைத் தனியார் நிறுவனம் செய்வதில்லை. அரசு ஆய்வக நுட்புநர்கள் பணியாற்றியபோது ஒவ்வொரு மருத்துவமனையிலும் மாதத்துக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பரிசோ தனைகள் செய்யப்பட்டன. ஆனால் இது தற்போது 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உண்மையான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்ப டுகின்றனர். 2016 ஜூனில் ஒப்பந்தம் முடிந்தும் தனியார் நிறுவனம் இன்னும் பணியைத் தொடர்கி றது'' என்றார்.

நோயாளிகள் அலைக்கழிப்பு

இதுகுறித்து ராமநாதபுரம் மருத் துவத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு ரூ.8 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்நோயாளிகள் பரிசோதனைக்கு ரூ.7 ஆயிரமும், வெளி நோயாளிகளுக் கு ஆயிரம் ரூபாயும் செலவிடப் படுகிறது. அதற்கு மேல் வரும் நோயாளிகளை அடுத்த நாளில் வரச் சொல்கின்றனர். இதனால் வெளிநோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அதே சமயம் அவசர நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் ஆய்வக பரிசோ தனை செய்யப்படுகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x