Published : 20 Apr 2017 08:26 AM
Last Updated : 20 Apr 2017 08:26 AM

பேரிடரின்போது சேதத்தை குறைக்க திட்டம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை டைரக்டர் ஜெனரல் ரமேஷ் தகவல்

புயல் போன்ற பேரிடரின்போது உயிரிழப்பை குறைப்பதுபோல, உடமைகள் மற்றும் உட் கட்டமைப்புகளின் சேதத்தையும் குறைப்பதற்காக கிராம அளவில் அனைத்து தகவல்களையும் சேகரித்து தகவல் தொகுப்பை உருவாக்க மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை டைரக்டர் ஜெனரல் கே.ஜெ.ரமேஷ் தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வுத் துறையும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமும் இணைந்து சென்னையில் “வானிலை சேவைகள், எதிர்காலத் தேவைகள்” என்ற தலைப்பில் பயனாளர்கள் சந்திப்புக் கூட்டத்தை நேற்று நடத்தின. இதற்குத் தலைமை தாங்கிய இந்திய வானிலை ஆய்வுத் துறை டைரக்டர் ஜெனரல் கே.ஜெ.ரமேஷ், வானிலை அறிக்கைகளில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் கையேட்டினை வெளியிட்டுப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இந்திய வானிலை ஆய்வு மையம், வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அரசுக்கும், பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்து வருகிறது. குறிப்பாக புயல், கனமழை, இடி மின்னல், காற்றின் வேகம், குளிர் ஆகியவற்றின் நிலையை அந்தந்த காலக்கட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கணித்து தகவல் தெரிவிக்கிறது. இதனால், பேரிடர் காலங்களில் உயிரிழப்புகளை குறைப்பதுடன், சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும் வானிலை ஆய்வுத் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது.

வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மழைமானி எண்ணிக்கையை ஒன்றில் இருந்து ஐந்தாக அதிகரிக்கவும், தானியங்கி வானிலை ஆய்வு நிலையத்தை 5-ல் இருந்து 15 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வளி மண்டலத்தில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியை ஆய்வு செய்யும் நிலையங்களின் எண்ணிக்கை 43-ல் இருந்து 53 ஆக உயர்த்தப்படும். இவை வடகிழக்கு மாநிலங்களிலும், மலைப்பகுதிகளிலும் அமைக் கப்படும். காற்றின் வேகத்தை ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்யும் 60 நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 13 நிலையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் தரையில் இருந்து செங்குத்தாக 9 கிலோ மீட்டர் தூரத்தில் வளி மண்டலத்தில் உள்ள மேலடுக்கு சுழற்சி குறித்து துல்லியமாக ஆய்வு செய்ய முடியும்.

சென்னை, காரைக்கால், திரு வனந்தபுரத்தில் அமைக்கப்பட் டுள்ள ரேடார் மூலம் வானிலை நிலவரம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரேடாரும் 400 கிலோ மீட்டர் சுற்றளவில் வானிலையில் ஏற்படும் இடி மின்னல், கனமழை, காற்றின் வேகம் உள்ளிட்ட பருவமாற்றம் குறித்து துல்லியமாக கணிக்கும். விமானப்படையில் உள்ள வானிலை ஆய்வு மையம் சார்பில் நாடு முழுவதும் 11 ரேடார்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தாண்டு 6 ரேடார்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ரேடார் கோவையில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் உள்மாவட் டங்களின் வானிலை நிலவரம் குறித்து துல்லியமாகக் கணிக்க முடியும்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் தொகை, வீடுகளின் அமைப்பு, (குடிசை வீடு, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு), மின் விநியோக வசதிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட தகவல் தொகுப்பை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த தகவல்களைக் கொண்டு உயிரிழப்புகளை குறைப்பது போல உடமைகள், உட்கட்டமைப்பு சேதங்களையும் குறைக்க முடியும்.

இந்த தகவல் தொகுப்பைக் கொண்டு மாநில அரசு மற்றும் வானிலை ஆய்வு மைய நெட்வொர்க்கும் இணைந்து செயல்பட்டால் பேரிடர் குறித்து சரியாகக் கணிப்பதுடன் பொதுமக்கள், விவசாயிகள் காப்பீட்டுத் தொகை கோருதல் போன்றவற்றில் பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்றார் ரமேஷ்.

பேட்டியின்போது, துணை டைரக்டர் ஜெனரல் எஸ்.பி.தம்பி,

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x