Published : 21 Sep 2016 04:52 PM
Last Updated : 21 Sep 2016 04:52 PM

மேட்டூர் அணையில் திறந்த நீர் கடைமடையை வந்தடையுமா?- டெல்டா விவசாயிகள் கவலை

சம்பா சாகுபடிக்காக நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பருவமழையும் கைகொடுத்தால் மட்டுமே சம்பா சாகுபடியை நல்ல முறையில் செய்ய முடியும் என்ற அச்சத்தோடு விவசாயிகள் பணிகளை தொடங்கியுள்ளனர்.

மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட வேண்டும். ஆனால், அந்த பருவம் முடிந்து தற்போது சம்பாவுக்கு தண்ணீர் திறப்பதே இழுபறியாக இருந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 87.82 அடியாக இருந்த நிலையில், இருக்கின்ற தண்ணீரைக் கொண்டு கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு 1.25 டிஎம்சி தண்ணீரை 100 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும். அணையில் தற்போதைய குறைந்த அளவு தண்ணீர் டெல்டா மாவட்டங்களின் கடைமடையை வந்தடையுமா என்ற அச்சம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.

பருவமழை பெய்தால்தான்…

இதுகுறித்து ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் தஞ்சை பரந்தாமன் கூறியபோது, “மேட்டூர் அணையில் உள்ள தற்போதைய தண்ணீரைக் கொண்டு 30 நாட்கள் மட்டுமே சமாளிக்க முடியும். வடகிழக்கு பருவமழை முறையாக பெய்தால் மட்டுமே சம்பா பயிரைக் காப்பாற்ற முடியும். வடகிழக்குப் பருவமழை குறித்த காலத்தில் பெய்தால்தான் நிலைமையைச் சமாளிக்கமுடியும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. எனவே, நேரடி தெளிப்பு போன்ற நீர் சிக்கனம் செய்யும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதே சிறந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதன் மூலம் எதிர்கால தமிழக விவசாயம் பாதுகாக்கப்பட்டுள்ள உணர்வு எழுந்துள்ளது. தமிழக அரசு காவிரி டெல்டாவில் உள்ள பாசன கட்டுமானங்களை சீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

நேரடி தெளிப்பு தீவிரம்…

இதுகுறித்து திருப்பத்தூர் விவசாயி கோவிந்தராஜன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சுப்பையன் ஆகியோர் கூறியபோது, “ஆற்றின் கொள்ளளவை விட கூடுதலாக தண்ணீர் திறந்தால்தான் கடைமடை வரையுள்ள கிளை வாய்க்கால் களில் தண்ணீர் ஏறிப்பாயும் என்ற நிலை உள்ளது. திறந்துவிடப்படும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை கடைமடை வயல்களுக்கு தண் ணீர் பாய்ச்சும் அளவுக்கு ஆறுகளில் பிரித்து தரஇயலாது என்றபோதிலும் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உணவு உற்பத்தியைச் செய்ய வேண்டுமே என்ற கடமையுணர்வுடன் நேரடி தெளிப்பை தொடங்கியுள்ளோம்.

மன்னார்குடி கிழக்கு பகுதிகள் தொடங்கி கோட்டூர், திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை, தலை ஞாயிறு, நாகப்பட்டினம் உட்பட பரவலாக இந்த நேரடி தெளிப்பு பணிகள் சுமார் 50 சதவீதத் துக்கு மேல் முடிந்துவிட்டன. இன்னும் 4 அல்லது 5 தினங்களில் நேரடி தெளிப்பு முடிந்துவிடும்.

இருப்பினும் வடகிழக்கு பருவமழை உரிய அளவில் பெய்து கைகொடுக்குமா என்ற அச்சம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. எனவே, பயிர்காப்பீடு பிரீமியத்தை அனைத்து விவசாயிகளுக்கும் அரசே செலுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x