Published : 12 Apr 2017 08:00 AM
Last Updated : 12 Apr 2017 08:00 AM

அம்பத்தூரில் 6-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்: பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகே ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

‘விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் இழப்புக்கான காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

6-வது நாளான நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செய லாளர் இரா.முத்தரசன், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் தெய்வ சிகாமணி, அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலா ளர் அதுல்குமார் அஞ்சான் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

பழ.நெடுமாறன் பேசும்போது, ‘கர்நாடக அரசியலை மையமாக வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய நதிநீர் தீர்ப்பாயம் என்ற ஒற்றை அமைப்பு தீர்வாகாது’ என்றார்.

தெய்வ சிகாமணி பேசும்போது, ‘விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநில அரசுகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் பேசி தவணை முறையில் விவசாய கடன்களை மாநில அரசு செலுத்துவதற்கு அவகாசம் கேட்டுள்ளன. அதேபோன்று தமிழக அரசும் வங்கிகளிடம் இருந்து விவசாயிகள் பெற்ற கடன்களை மாநில நிதியில் இருந்து செலுத்த வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x