

லட்சக்கணக்கான தொழிலாளர் களின் நலன் கருதி பட்டாசு, ஜவுளித் துறைக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நேற்று வெளியிட்ட அறிக்கை:
சிவகாசியின் பல பகுதிகளில் குடிசைத் தொழில் போல் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிலில் சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பட்டாசுக்கு விதிக்கப்பட்டிருந்த 12 சதவீத வரி ஜிஎஸ்டி-ல் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வால் பட்டாசுத் தொழிலே அழிந்துவிடும் என்ற பயம் தொழிலாளர்களுக்கு உருவாகி உள்ளது. எனவே, மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸ்:
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியால் கடுமையாக பாதிக்கப்படும் துறைகளில் ஜவுளித் துறை முக்கியமானதாகும். இத்துறையில் துணி நெய்வதற்காக நூல்களை கொள்முதல் செய்வதில் தொடங்கி வெளுத்தல், சாயம் நனைத்தல், தைத்தல் உள்ளிட்ட அனைத்து நிலைகளும் தனித்தனியானதாகக் கருதப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வரி விதிக்கப்படுகிறது.
5% முதல் 18% வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் துணிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதனால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
அதேபோல், பட்டாசுகள் மீது 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்க முடியாத ஒன்று. இதனால் பட்டாசுகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். விற்பனை பெருமளவில் குறையும். பட்டாசு வரிக்கான உள்ளீட்டு வரியை திரும்பப் பெற முடியும் என்பதால் பட்டாசுத் தொழிலுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கூறப்படுகிறது. இது நியாயமற்ற வாதமாகும்.
மத்திய அரசின் வருவாய்ப் பசிக்காக இந்த 2 துறைகள் மீது அதிக வரி விதித்தால் இந்த துறைகள் முற்றிலுமாக அழிந்துவிடும். இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் இரு தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். மத்திய அரசும் இவ்விஷயத்தில் நியாயத்தை உணர்ந்து வரியைக் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.