

பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் ரூ.11,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பங்கு விலக்கல் மூலம் அடுத்த ஆண்டில் ரூ.72,500 கோடி திரட்டவும் இலக்கு வைத்துள்ளது. மொத்த இலக்கில் குறைந்தபட்ச பங்கு விற்பனை மூலம் ரு.46,500 கோடியும், பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ.15,000 கோடியும் திரட்டப்படும். நடப்பு இலக்கான ரூ.45,500 கோடி என்கிற இலக்கை விட அடுத்த ஆண்டு இலக்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களில் குறைந்தபட்ச பங்கு விற்பனை மற்றும் பங்கு விலக்கல் மூலம் ரூ.11,000 கோடியும் திரட்டப்படும். இது தொடர்பாக பேசிய பங்கு விலக்கல் துறை செயலர் நீரஜ் குப்தா, ஒட்டுமொத்த பட்ஜெட் இலக்கை நிறைவேற்றுவதற்கு ஏற்ப பங்கு விலக்கல் துறை நடவடிக்கைகள் இருக்கும் என்று குறிப்பிட் டுள்ளார்.
சமீபத்தில் ஐந்து பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை படிப்படியாக 75 சதவீதமாக குறைத்துக் கொள்ள மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. மேலும் இந்த நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடவும் அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரத்துறை அமைச்சத்தின் கூட்டத்தில் ஐந்து பொதுக் காப்பீடு நிறுவனங்களை பட்டியலிட அனுமதி அளிக்கப்பட்டது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ், மற்றும் ரீ இன்ஷூரன்ஸ் பிரிவை சேர்ந்த ஜிஐசி ஆகிய நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிட அனுமதி வழங்கியுள்ளது.
எந்தெந்த நிறுவனங்களில் பங்கு விலக்கம் இருக்கும் என்பது குறித்து ஏற்கெனவே முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை அடையாளம் கண்டுள்ளது. மேலும் இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. தேசிய கட்டுமான திட்ட நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.