Published : 01 Apr 2017 03:52 PM
Last Updated : 01 Apr 2017 03:52 PM

இந்தி மொழி திணிக்கப்படுகிறதா?- ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில்

இந்தி மொழி திணிக்கப்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக இளைஞரணி துணைத்தலைவர் எஸ்.ஜி.சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் அளித்துள்ள பதில் பின்வருமாறு:

முதல்வராக இருந்த ஜெயலலிதா என்னும் மிகப்பெரிய ஆளுமை இல்லாத வெற்றிடம் தம்மை தானாகவே வந்து சேரும் என்ற மிதப்பில் இருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அது நடக்காமல் போகவே விரக்தியில் செய்வதறியாது தவித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அதிர்வலைகள் எதுவுமே திமுகவுக்கு சாதகமாக திரும்பாமல் போகவே தமிழக அரசியலின் போக்கை எப்படியாவது தன் பக்கம் திருப்ப வேண்டும் என மீண்டும் ஒரு மொழிப் போராட்டம் என்று சொல்லி உணர்வுகளை தூண்டி தமிழக அரசியலில் தன்னை நிலைப்படுத்த பொய்களை கூறி வருகிறார் ஸ்டாலின். மத்தியில் ஆளும் மோடியின் அரசை எதிர்க்க எந்த காரணமும் இல்லை என்பதால் 1960-ல் நடந்த மொழிப் போராட்டத்தை கையில் எடுக்கிறார். இது அவரின் பிற்போக்குத்தனத்தையே காட்டுகின்றது.

ஸ்டாலின் கடந்த 30-ம் தேதியன்று பாஜக அரசால் தமிழர்கள் மீது இந்தி திணிப்பதாக சொல்லி ஒரு விரிவான அறிக்கை மற்றும் ஒரு புகைப்படத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் இந்தியை புகுத்தினால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஸ்டாலின் மத்திய அரசை விமர்சிக்கும் போது தகவல்கள் முழுவதும் தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். ஸ்டாலின் எந்த முடிவை எதிர்க்கிறாரோ அந்த உத்தரவை போட்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்பது தான் உண்மை. அந்த மத்திய அரசில் அப்போது மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தது இதே திமுகவின் டி.ஆர். பாலு தான் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா?

ஒவ்வொரு கிலோ மீட்டரிலும் எந்த மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அவருடைய அமைச்சகம் பிறப்பித்த உத்தரவையே தற்போது நெடுஞ்சாலை துறையினர் பின்பற்றி வருகின்றனர். அப்போதைய அரசின் முடிவை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடுமையாக எதிர்த்ததும், அப்போதைய பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியதும் வரலாறு.

2009 வரை அமைச்சகத்தை தக்க வைக்க தெரிந்த டி.ஆர்.பாலுவிற்கு இந்த உத்தரவை மாற்ற நேரமில்லை என்பது தான் கொடுமை. திமுக - காங்கிரஸ் அரசு வகுத்த கொள்கை உத்தரவைதான் முறையாக செயல்படுத்த இந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முனைந்துள்ளது. இது இந்தி திணிப்பென்றால் இதை திணித்தது ஐக்கிய முற்போக்கு அரசு, திமுக கட்சி. எனவே போராட்டம் செய்ய வேண்டுமென்றால் திமுகவை எதிர்த்து தான் ஸ்டாலின் போராட வேண்டும்.

ஸ்டாலின் அறிக்கையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஸ்டாலின் சொன்னது:

1. மோடியின் அரசாங்கம், மூன்றாவது பாட மொழியாக மத்திய அரசின் கேந்திர வித்யாலயாக்களில் இருந்த ஜெர்மனை அகற்றி சமஸ்கிருதத்தை திணிக்கிறது. இது சமஸ்கிருத திணிப்பு வேலை.

உண்மை:

கேந்திரிய வித்யாலயா, பின் தொடரும் மூன்று மொழி திட்டத்தில் அரசியலமைப்பின் அட்டவணை 8-ல் பட்டியலிடப்பட்டுள்ள 23 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியையே மூன்றாவது பாடமாக தேர்ந்தெடுக்க முடியும். ஜெர்மன், ஸ்பானிஷ், ரஷிய மொழி போன்றவற்றை கூடுதல் மொழிகளாகவே கற்பிக்க முடியும், மூன்றாவது மொழியாக அல்ல.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக 2011–ல் சட்டவிரோதமாக அரசியல் சாசன மீறும் வகையில மூன்றாவது மொழி பாடமாக ஜெர்மன் மொழி அறிவிக்கப்பட்டது.

ஜெர்மன் மொழி மூன்றாவது மொழியாக இருக்கலாம் என மூன்று ஆண்டுகளுக்கு கேந்திரிய வித்யாலயாவும் மேக்ஸ் முல்லர் பவனின் கோதே நிறுவனமும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து மூன்றாவது மொழியாக கேந்திரிய வித்யாலயாக்களில் ஜெர்மன் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய திமுக காங்கிரஸ் கூட்டணி அரசால் சட்டவிரோதமாக ஒரு செயல் அமல் செய்த போது அதை தட்டிக்கேட்காத திமுகவும், ஸ்டாலினும் தற்போது சட்ட விதிகளை உள்ளவாறே நிறைவேற்றிய பாஜக அரசை குறை சொல்வது மட்டும் அல்லாமல், சமஸ்கிருத திணிப்பை சம்பந்தம் இல்லாமல் முடிச்சிடுவது வேடிக்கையாக உள்ளது.

அது மட்டுமின்றி தமிழகம், புதுச்சேரியில் தான் மற்ற மாநிலங்களை போல மும்மொழி கொள்கையே இல்லையே. இரண்டு மொழி தான் இங்கே கேந்திர வித்யாலயாக்களில். தமிழகத்தையும், தமிழ் மொழியையும் எந்த வகையிலுமே பாதிக்காத இந்த செயல் எவ்வாறு தமிழ் மொழிக்கு எதிரானது என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும்.

ஸ்டாலின் சொல்வது: பள்ளிகளில் சமஸ்கிருதம் வாரம் கொண்டாடப்படுகின்றது. இதன் மூலம் சமஸ்கிருதம் திணிக்கப்படுகின்றது.

உண்மை: மீண்டும் ஒரு அப்பட்டமான பொய். பிரதமர் மோடி, எந்த அரசுப் பள்ளியையும் கட்டாயமாக சம்ஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என ஒருபோதும் சொல்லவில்லை. இது குறித்து மனிதவள அமைச்சகம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. சமஸ்கிருதம் என்ற மொழி உலகத்துடன் இணைந்த மொழி அந்த மொழியை ஊக்குவிக்கவே சமஸ்கிருதம் கற்று தரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதம் வாரத்தை விரும்பினால் கொண்டாடலாம் என்று தான் மோடி அரசின் சுற்றறிக்கை குறிப்பிட்டிருந்தது. இதில் எந்த இடத்திலும் கட்டாயம் என சொல்லவில்லை.

யாரோ சமஸ்கிருதம் கொண்டாட விரும்பினால் ஏன் ஸ்டாலின் கவலைப்பட வேண்டும்? ஒரு சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுகிறது என்றால் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட கழகங்கள் தமிழ் கற்று தரும் பள்ளிகளில் தமிழ் மொழி வாரம் என கொண்டாடி இருக்கலாமே? யாரேனும் தடுத்தனரா?

ஸ்டாலின் சொல்வது: தூர்தர்ஷன் சேனலில் அரை மணி நேரம் சமஸ்கிருதம் செய்தி அறிமுகப்படுத்திருப்பது சமஸ்கிருதம் திணிப்பதாக உள்ளது.

உண்மை: தூர்தர்ஷனில் ஐந்து நிமிடம் சமஸ்கிருதம் மொழியில் ‘வர்தா’ எனும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் மாலை 6.55 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டு தான் இருக்கிறது. பாங்காக்கில் 16-வது உலக சமஸ்கிருதம் மாநாடு 2015-ல் நடந்தது. அப்போது சமஸ்கிரதம் பிறந்த நாடு என்னும் வகையில் அந்த மொழியை கவுரவிக்க டிடி நியூஸ் சேனலில் புதிதாக வாரமொரு முறை அரை மணி நேரம் சமஸ்கிருத செய்திகள் ஒளிபரப்படும் என அறிவிக்கப்பட்டது. சமஸ்கிருத நிகழ்ச்சி வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தூர்தர்ஷனிடம் வெகு நாட்கள் கோரிக்கைகள் சென்ற வண்ணம் இருந்தன. இதன் தொடர்ச்சியாகவே இந்தி தூர்தர்ஷன் தொலைகாட்சியில் வாரம் அரை மணி நேரம் சம்ஸ்கிரத்தில் செய்தி வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இங்கே தமிழர்கள் மீதோ, தமிழ் மொழி மீதோ, தமிழ் தொலைக்காட்சி மீதோ எவ்வாறு சமஸ்கிருதம் புகுத்தப்பட்டததா? ஏன் இந்த அப்பட்டமான பொய்? யாரை திருப்திபடுத்த?

ஸ்டாலின் சொல்வது: சட்டம் ஆணையம் அறிக்கைகள் இந்தி கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

உண்மை: இந்தியாவில் அதிகமான மக்கள் இந்தி பேசுகிறார். முன்னதாக சட்ட ஆணையம் அறிக்கைகள் ஆங்கிலத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டன. நாட்டின் உள்ள அனைவரும் கான்வென்ட் பள்ளி ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் அல்ல என்று ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியர்களில் அதிகமானோர் இந்தி மொழி பேசுபவர்கள் மற்றும் எழுதுபவர்கள். அதனால் பிற பகுதிகளில் வாழும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் சட்ட ஆணைய அறிக்கைகள் இந்தியில் தயாரிக்கப்படுகின்றன, வெளியிடப்படுகின்றன.

தமிழில் சட்டம் ஆணையம் அறிக்கைகள் வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கோரினால் அவரை உண்மையான முற்போக்கான தலைவர் எனலாம், அதை விடுத்து இந்தியில் தயாரிக்க கூடாது என்று கூச்சலிடுவது விதண்டாவாதம்தான்.

ஸ்டாலின் சொல்வது: மோடி அரசு அரசு அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளில் இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்கின்றது, மற்றும் தகவல் தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்த முயல்கிறது .

உண்மை: காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்தபோது 2014 மார்ச் மாதம் அதிகாரபூர்வ மொழிகள் துறை வாயிலாக உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் இந்தி பேசும் மாநிலங்கள் அரசு அலுவலகங்களிலும், சமுக ஊடகங்களிலும் இந்தி மொழியை கட்டாயமாக பயன்படுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தி மற்றும் ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழிகள் எனவும் இந்த இரண்டு மொழிகளில் முகநூல் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்தி பேசாத மொழி மாநிலங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டாம் எனவும் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தது. இதில் தமிழ்நாடும் அடங்கும். நிலைமை இவ்வாறு இருக்க ஸ்டாலினோ அனைத்து இடங்களிலும் இந்தி திணிக்கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை பதிவிட்டு வருகிறார். ஒரு சுற்றறிக்கையை கூட முழுமையாக படித்து விட்டு கருத்து தெரிவிக்கலாமே.

ஸ்டாலின் தமிழக அரசியலில் வகித்து வரும் மூத்த பொறுப்பிற்கு இவ்வாறு பொய்களை கூறி தவறான முன்னோடியாக திகழ்வது அழகல்ல என்பதை மிகுந்த மன வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x