

தமிழகத்தில் 48 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 18 ஆக்கு பேஷனல் தெரபிஸ்ட் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தமிழக அரசு மருத்துவமனை களில் 1969-ம் ஆண்டுக்கு பிறகு ஆக்கு பேஷனல் தெரபிஸ்ட் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
இதனால் பக்கவாதம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தலைக் காயம், தண்டுவடம் காயத்தால் நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், மூளை மற்றும் வளர்ச்சி குறைபாடுகளால் பாதிக் கப்பட்ட குழந்தைகள், கை அசைவுகளை இழந்தவர்கள் மற்றும் பல்வேறு நரம்பு, எலும்பு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் முறையான பயிற்சி கொடுத்து அவர்களுக்கு மறு வாழ்வு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் 48 ஆண்டு களுக்கு பிறகு முதல் முறையாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 18 ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் தற்போது பணியமர்த் தப்பட்டுள்ளனர்.
இதுபற்றி மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் நாராயண பாபு கூறும்போது, “மருத் துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அரசு மருத்துவமனைகளில் தேவையான பணியிடங்கள் நிரப் பப்பட்டு வருகின்றன. அந்த தேர்வு வாரியத்தின் மூலமாகவே ஆக்கு பேஷனல் தெரபிஸ்ட் பணியிடம் நிரப்பப்பட்டது” என்றார்.
காமாட்சி பண்டரிநாதன் அறக் கட்டளை நிர்வாக அறங்காவலரும், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்டுமான பா.சுகுமார் கூறியதாவது:
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 18 ஆக்கு பேஷனல் தெரபிஸ்ட் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக் கிறது. ஆக்குபேஷனல் தெர பிஸ்ட் படித்துவிட்டு அரசுப் பணிக்கு காத்திருக்கும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மூளை மற்றும் வளர்ச்சி குறை பாட்டால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 6 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சையும் பயிற்சியும் கொடுத் தால் தான், மறுவாழ்வு கொடுக்க முடியும். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 15 ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் என அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாக மாவட்ட மறுவாழ்வு மையங்களில் நிரப்பப்படாமல் உள்ள ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பயிற்சியை தொடங்க 10 ஆண்டு களுக்கு முன்பே அனுமதி கிடைத்துவிட்டது. அந்த கல்லூரி களை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றார்.