

தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு முன்வரவில்லை. இதனால் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. பருவமழையும் இந்த ஆண்டு பொய்த்துவிட்டது. இதனால் கடந்த 150 ஆண்டுகளில் காணாத வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த அபாயகரமான வறட்சி நிலையை உணர்ந்து தமிழக அரசு செயல்பட்டதாகவே தெரியவில்லை. நிவாரணப் பணிகளில் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இதுவரை 139 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், வறட்சிப் பகுதிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர்கள் ஒருவர்கூட தற்கொலை செய்யவில்லை என கொச்சைப்படுத்தி பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
139 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் 17 பேருக்கு மட்டும் தலா ரூ. 3 லட்சம் வழங்கியிருப்பது வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகும். ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டால் அதிர்ச்சியால் 470 அதிமுக தொண்டர்கள் இறந்ததாகக் கூறி எந்த ஆய்வும் செய்யாமல் தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 14 கோடியே 10 லட்சம் வழங்கினார்கள். ஆனால், விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்க தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.
விவசாயிகளின் தற்கொலையை ஏற்றுக் கொள்வது அவமானம் என தமிழக அரசு கருதுகிறது. இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்கள் விவசாயிகளின் தற்கொலையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு மத்திய அரசிடமிருந்து நிவாரணங்களை பெற்று வருகின்றன.
பயிர்க் கடன்களை மத்திய கால கடன்களாக மாற்றுவது, ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரத்து 465 நிவாரணம் போன்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. விவசாயத்தின் அடிப்படை உண்மைகளை தெரியாதவராக முதல்வர் இருப்பது வேதனை அளிக்கிறது.
கடந்த 2015-ல் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது ரூ. 25 ஆயிரத்து 912 கோடி தமிழக அரசு கேட்டது. ஆனால், மததிய அரசு ரூ. 1,940 கோடி மட்டுமே வழங்கியது. வார்தா புயலுக்கு ரூ. 10 ஆயிரம் கோடியும், முதல் தவணையாக ரூ. 1,000 கோடியும் தமிழக அரசு கேட்டது. ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை.
எனவே, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கணிசமான நிதியைப் பெற தமிழக அரசு உரிமைக் குரல் எழுப்பி போராட வேண்டும். அப்போதுதான் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்துக்கும் நிவாரண நிதி கிடைக்கும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.