

‘தி இந்து’ நாளிதழ் ‘கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து நடத்தும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி நாளை (மார்ச் 12) ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி, தேர்வுக்கு எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏகப்பட்ட கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
அப்படிப்பட்ட தயக்கத்தை போக்கும் வகையில், ஐஏஎஸ் தேர்வெழுத விரும்புவோருக்கு தெளிவைத் தரும் நோக்கில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ளது.மதுரை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி, ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரா.கற்பூரசுந்தரபாண்டியன், செங்கல்பட்டு சார் ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், ‘தி இந்து’ தமிழ்நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பேராசிரியர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றுகிறார்கள். காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சி, மதியம் 1 மணி வரை நடைபெறும்.