Published : 27 Mar 2017 12:05 PM
Last Updated : 27 Mar 2017 12:05 PM

ஈரோடு மாவட்டத்தில் அந்நிய தயாரிப்பு குளிர்பானங்கள் விற்பனை 70 சதவீதம் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பெப்சி, கோக் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், அவற்றின் விற்பனையில் 70 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

மார்ச் முதல் தேதி முதல் அந்நிய தயாரிப்பு குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்றவற்றை வணிகர்கள் விற்பனை செய்ய மாட்டார்கள் என வணிகர் சங்கங் களின் பேரமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. இதனை ஏற்று மாநிலம் முழுவதும் பெரும்பாலான வணிகர்கள் பெப்சி, கோக் விற்பனையை நிறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் குளிர்பானங்களை விற்பனை செய்யும் பேக்கரி, மளிகைக் கடைகள் என 10 ஆயிரம் கடைகள் உள்ளன. வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அழைப்பை ஏற்று, இந்த கடைகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே, ‘இங்கு பெப்சி, கோக் விற்பனை செய்யப்பட மாட்டாது’ என்ற பதாகைகள் வைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மார்ச் முதல் தேதி முதல் அந்நிய தயாரிப்பு குளிர்பானங்கள் விற்பனையை பெரும்பாலான கடைகள் நிறுத்தியுள்ளன. இந்த கடைகளில் காளி மார்க் உள்ளிட்ட உள்நாட்டு தயாரிப்பு நிறுவன குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இத்துடன் பழச்சாறு, இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்டவற்றையும் வணிகர்கள் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சண்முகவேல் கூறிய தாவது:

எங்களின் வேண்டுகோளை ஏற்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7000-க்கும் மேற்பட்ட கடைகளில் பெப்சி, கோக் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 70 சதவீத விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாங்கி வைத்தவற்றை திரும்ப எடுத்துச் செல்லுமாறு வணிகர்கள் வற்புறுத்தியும், அந்நிறுவனத்தினர் திரும்ப எடுத்துச் செல்லாமல் உள்ளனர். இன்னும் ஒரு வார காலத்தில் அவற்றை திரும்ப எடுத்துச் செல்லாவிட்டால், இருப்பில் உள்ள குளிர்பானங்களை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

அந்நிய குளிர்பானங்களைப் புறக்கணிப்பது என்ற எங்கள் முடிவிற்கு வணிகர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும், இளைஞர்களும் பெரும் ஆதரவு தெரி வித்துள்ளனர். உள்நாட்டு தயாரிப்பு குளிர் பானங்கள், பழச்சாறு, பன்னீர் சோடா போன்றவற்றையே விரும்புகின்றனர். மளிகைக்கடை களிலும் இளநீர் விற்பனை தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தியேட்டர்களில் மாற்றம் வருமா?

திரையரங்குகளில் இவ்வகை குளிர்பானங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து வணிகர் பேரமைப்பு நிர்வாகிகளிடம் பேசியபோது, பெப்சி, கோக் விற்பனையை நிறுத்த வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். ஏற்கெனவே, நிறுவனங்கள் சார்பில் திரையரங்க கேண்டீன்களில் இலவச திட்டங்களை அறிவித்து, அவர்களை அதிக அளவில் குளிர்பானங்களை கொள்முதல் செய்ய வைத்துள்ளன. இவற்றை விற்பனை செய்து முடித்தபின் தொடர்ந்து வாங்க மாட்டார்கள் என நினைக்கிறோம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x