Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் பட்ஜெட்- நிதியமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை பேசியதாவது:-

கடந்த மே 2011 ல் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, முந்தைய தி.மு.க அரசின் திறமையற்ற நிர்வாகத்தால், மாநிலத்தின் நிதி நிலைமை, சீர் கெட்டுக் கிடந்தது. 2010-2011- ம் ஆண்டின் இறுதிக் கணக்கின்படி, மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை, ரூ.2,729 கோடியாக இருந்தது. நிதிப் பற்றாக்குறையின் அளவும், ரூ.16,647 கோடி ரூபாயாக, இருந்தது. இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில், 3.04 சதவீதமாக இருந்தது. பல்வேறு அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தன.

இத்தகைய சூழலில்தான், மூன்றாம் முறையாக, தமிழகத்தின் முதலமைச்சராக அம்மா பொறுப்பேற்றார். அவரது சீரிய முயற்சிகளின் விளைவால் ஓராண்டிலேயே, மாநிலம், வருவாய் பற்றாக்குறையை சந்தித்த நிலை மாறி, ரூ.1,364 கோடி வருவாய் உபரி நிலையை 2011-2012-ல் எட்டியது.

2012-2013-லும் 1,760 கோடி வருவாய் உபரி நிலையை எட்டி, சாதனை படைத்தது. அதேபோல், நிதிப் பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தி, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறையின் அளவு, 2011-12-ல் 2.97 சதவீதமாகவும், 2012-2013-ல், 2.39 சதவீத அளவிற்கும் குறைக்கப்பட்டது.

பாதிப்பு ஏன்?

நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டவாறு, 2012-2013 முதல், நாட்டின் பொருளாதார நிலையில், கடும் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால், தமிழகத்தின் பொருளாதார நிலையும், பாதிப்புக்குள்ளாகியது. 2012-2013-ல் தொடங்கிய இந்தசரிவு, 2013-2014 - லும் தொடர்ந்த காரணத்தினால், மாநிலத்தின் வரி வருவாயும், பெரும் பாதிப்புக்குள்ளாகியது. ஆனால், இந்தச் சூழலிலும், அ.தி.மு.க அரசு செயல்படுத்தி வரும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்காமல், அவற்றுக்குத் தொடர்ந்து, போதிய அளவு நிதி ஒதுக்கி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான், நிதி மேலாண்மையில், கடுமையான சவால்களை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநிலத்தின் வரி வருவாய் குறைந்த போதிலும், செலவினங்களை ஓரளவு கட்டுப்படுத்தி, 2013-2014-ல் வருவாய் உபரி, ரூ. 244 கோடி ரூபாயாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சிரமங்கள் பல இருந்தாலும் கூட, இந்த நிதிநிலை அறிக்கை, மக்களின் நலனை பேணுவதற்கான பல திட்டங்களைத் தாங்கி, ஒரு முழுமையான அறிக்கையாக, ஊக்கத்தைத் தரக்கூடிய அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை, தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வதற்கான நல்வழியை வகுக்கும் என்பது உறுதி.

பஞ்சு மிட்டாயா?

இந்த நிதிநிலை அறிக்கையைப் பற்றி, கருத்து தெரிவித்துள்ள அனைத்து தொழில் அமைப்புகளும், அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை விரிவாக பாராட்டியுள்ளன.

எண்ணற்ற பல புதிய திட்டங்களைக் கொண்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் பஞ்சு மிட்டாய் அல்ல. தலை வாழை இலை போட்டு, தமிழ்நாட்டுக்கே வைக்கப்பட்ட விருந்து.

மாற்றாந்தாய் மனப்பான்மை

காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களுக்கு மட்டும், மத்திய காங்கிரஸ் அரசு அள்ளி அள்ளிக்கொடுக்கிறது. காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு, கிள்ளிக்கூட கொடுக்க மறுக்கிறது. அதிலும், குறிப்பாக தமிழகத்தை மட்டும், மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ஆட்சியில் இருந்த பொழுது, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் எதையும் கேட்டுப் பெறவில்லை. தமிழகத்தின் நலனுக்காக கருணாநிதி, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x