Last Updated : 17 Jul, 2016 02:34 PM

 

Published : 17 Jul 2016 02:34 PM
Last Updated : 17 Jul 2016 02:34 PM

இடுக்கி மாவட்டத்தில் பருவமழை தீவிரம்: 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஏல தோட்டங்கள் சேதம்

தேனி, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இடுக்கி மாவட்டம் முட்டுக்காடு, வண்டல்மேடு, சாந்தம்பாறை, பைசன்வாலி, கட்டப்பணை உள்ளிட்ட பகுதிகளில் 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஏலக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விளையும் ஏலக்காய்களை போடியில் அமைந்துள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஏலக்காய் விற்பனை மையத்துக்குக் கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர்.

தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இவர்கள் ஈரான், ஈராக், சவுதி அரேபியா, கத்தார் போன்ற அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏலக் காய்களை ஏற்றுமதி செய்கின்றனர்.

இந்நிலையில், 6 மாதங் களுக்கு முன், இடுக்கி மாவட் டத்தில் மழையில்லாமல் ஏலக்காய் செடிகள் வாடின. இந்நிலையில், ஒரு மாதமாக அங்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தோட்டங்களில் மழைநீர் தேங்கி வேர் அழுகல் நோய் தாக்கி வருகிறது. இதன் காரணமாக பூப்பாறை, ராஜகுமாரி, உடும்பன் சோலை, கஜானா பாறை, சாந்தம் பாறை, பாம்பாடும் பாறை, அடிமாலி, பைசன்வாலியில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஏலக்காய் செடிகள் சேதமடைந்து விட்டன. இதனால் பெரும் நஷ்டம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போடி ஏலக்காய் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம். சம்பத் கூறியதாவது: பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், ஏலச்செடிகள் ஒடிந்து விட்டதோடு, பறிக்கும் நிலையில் இருந்த காய்களும் சேதடைந்து விட்டன. மேலும் நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விற்பனை மையத்துக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1.50 லட்சம் கிலோ வரத்து இருந்த ஏலக்காய், தற்போது அதில் பாதியாக குறைந்து 80 ஆயிரம் கிலோவாக உள்ளது. வரத்து குறைந்து விட்டதால், தரத்துக்கேற்ப கிலோ ரூ. 450 முதல் ரூ. 650 வரை விலைபோன ஏலக்காய் ரூ. 650 முதல் ரூ. 850 வரை விலை உயர்ந்து விட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x