Published : 18 Aug 2016 01:28 PM
Last Updated : 18 Aug 2016 01:28 PM

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெறுக: ஜி.ராமகிருஷ்ணன்

திமுக உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக இடை நீக்கம் செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. சபாநாயகர் தனது நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்குவாதத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டு திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு வார காலம் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும், தற்போது பாஜக ஆட்சியிலும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடப்பதுண்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் போராட்டங்களும் நடப்பதுண்டு. போராட்டங்கள் காரணமாக சில நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த உறுப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் நடைபெறும் விவாதங்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் எல்லாமே ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும்.

இதனைக் கூட சகித்துக்கொள்ள முடியாத வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் நடந்துகொண்டிருப்பது எதேச்சதிகாரமானது. எம்.எல்.ஏக்களின் இடைநீக்க நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில், அப்போதைய எதிர்க் கட்சியான தேமுதிக எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்த நடவடிக்கையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் இது ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

திமுக உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக இடை நீக்கம் செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. சபாநாயகர் தனது நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x