பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை: துளசிங்கம்

பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை: துளசிங்கம்
Updated on
1 min read

பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை, பிளாஸ்டிக் அரிசி எனும் செய்தியே பொய்யானது என தமிழ்நாடு அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் துளசிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் மக்களை அதிர்ச்சி அடைய செய்துவரும் சூழ்நிலையில் 'தி இந்து தமிழ் ஆன்லைனி'டம் துளசிங்கம் கூறியதாவது:

''சபரிமலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதியில்லை. ஏனெனில் அங்கு பிளாஸ்டிக் பைகள் இருந்தால் யானைகள் இறந்துவிடும். அப்படியிருக்கும்போது பிளாஸ்டிக்கின் ஆபத்தை நன்கு உணர்ந்த நமது அரசுகள் அவ்வளவு எளிதாக பிளாஸ்டிக் அரிசியை அனுமதித்துவிட மாட்டார்கள்.

பேட்டரி உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகள் விலை அதிகம் என்பதால் சீனாவில் இருந்து வரவழைக்கிறோம். அதற்காக அரிசியைக் கூடவா வாங்குவோம்? வெளிநாடுகளில் இருந்து நோய் பரவினாலே விமான நிலையத்தில், துறைமுகங்களில் கடுமையாக சோதனைகள் நடத்தப்படுகின்றன. அத்தகைய நிலையில் பிளாஸ்டிக் அரிசி இந்தியாவிற்குள் நுழைவது என்பது எவ்வகையில் சாத்தியம்? அதனால் இங்கு பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.

அடிப்படையான ஒரு விஷயம் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி என்பதே இங்கு இல்லை. அதனால் பிளாஸ்டிக் அரிசிக்கு என்ன வேலை. அப்புறம் இந்த பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்வதற்கான விலையும் மிக அதிகம். யோசிக்க வேண்டாமா? 50 கிராம் பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால் உயிர் பிழைப்பதே அரிது. அடுத்தது, அரிசி இறக்குமதி செய்யும் அளவுக்கான தேவை நம் நாட்டில் இதுவரையிலும் ஏற்படவில்லை.

பால், தயிர், மின்சாரம் போன்றவற்றிற்கு பற்றாக்குறை கூட ஏற்பட்டுள்ளது. தற்சமயம் அரிசிக்கான பற்றாக்குறை இல்லை. தமிழக சுகாதாரத் துறையினர் மிகச் சிறப்பாக பரிசோதனை செய்துவருகிறார்கள். செய்தவரையில் பிளாஸ்டிக் அரிசிகள் கிடையாது என்பதை உறுதிபடுத்தி சொல்லியிருக்கிறார்கள். ஒரு தவறான செய்தியை மிகைப்படுத்தி மக்களை ஏன் இப்படி பயமுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கிடையே வணிகர்கள் சங்க லாரிகள் நிறைய செல்கின்றன. தென்னிந்திய மாநிலங்களுக்குள்ளாக அரிசி ஏற்றுமதி இறக்குமதி நடைபெறுகிறது. அதனால் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அங்கங்கே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக வரும் செய்திகள் எல்லாமே வதந்திதான். பிளாஸ்டிக் அரிசி என்பதே பொய்யான ஒன்று'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வரும் தகவல்களையடுத்து தமிழகம் முழுவதும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தில் எங்கும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இல்லை என்றும், இதுதொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in