Published : 07 Oct 2013 11:46 AM
Last Updated : 07 Oct 2013 11:46 AM

தமிழக மீனவர்களின் விசைப் படகுகள் மீட்கப்படும் - ப.சிதம்பரம் உறுதி

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மீனவர்களின் விசைப்படகுகள் உள்பட 32 படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்தார். இதுகுறித்து இலங்கை செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் வலியுறுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர் களையும், 32 விசைப் படகுகளை யும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்துள்ளது. இவர்களை இலங்கை நீதிமன்றங்கள் அவ்வப் போது விடுதலை செய்தாலும், 2013 -ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 32 விசைப்படகுகளில் ஒன்றைகூட விடுவிக்கவில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் முடங்கியுள்ளது.

செப்டம்பர் 4-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மீனவர்களின் 5 விசைப்படகுகளை இலங்கை அரசுடமையாக்கி பருத்தி துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மீதமுள்ள விசைப்படகுகளை மீட்பது தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம், திரிகோணமலை, புத்தளம் நீதிமன்றங்கள் ஒத்திவைத்துள்ளன.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியா திரும்பிய நிலையில் விசைப்படகுகளை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்காக இலங்கை நீதிமன்றங்களில் ஆஜராவதில் மீனவர்களிடையே சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாளகிரியில் உள்ள மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில், மீனவர் நேசக்கரங்கள் அமைப்பின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ தலைமையில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டுத்தருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

மீனவர்களின் கோரிக்கைகளைக் கேட்ட அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மீனவர்களின் விசைப்படகுகள் உள்பட 32 படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என அதிபர் ராஜபக்சவிடம் நேரில் வலியுறுத்துமாறு திங்கள்கிழமை இலங்கை செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x