Last Updated : 29 Jul, 2016 09:49 AM

 

Published : 29 Jul 2016 09:49 AM
Last Updated : 29 Jul 2016 09:49 AM

அவதூறு சட்டப்பிரிவை நீக்குவதே தீர்வாக இருக்கும்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

தேமுதிக தலைவர் விஜய காந்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், பிடிவாரன்ட் பிறப்பித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவதூறு வழக்கை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்றும், அரசை விமர்சித்து பேசினால் அவதூறு வழக்கு தொடரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கூறியதாவது:

இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 499, 500 ஆகியவைதான் அவதூறை குற்றச் செயலாக மாற்றுகின்றன. உலகத்தில் பல நாடுகளில் அவதூறாக பேசுவதை குற்றமாக கருதும் பிரிவில் இருந்து நீக்கிவிட்டனர். சுப்பிரமணியன் சுவாமி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவதூறு சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டப் பிரிவு தேவைதான் என உத்தரவிட்டது.

ஆனால், தற்போது வேறொரு வழக்கில் அவதூறை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று கூறி யுள்ளது. உச்ச நீதிமன்றம் கருத்து கூறினாலும் சட்டப் புத்தகத்தில் அந்தப் பிரிவுகள் இருக்கும். எனவே, இந்த உச்ச நீதிமன்றத்தின் கருத்து தற்காலிக மகிழ்ச்சியை அளித்தாலும் அது நிரந்தர தீர்வல் ல. குற்றவியல் அவதூறு சட்டப் பிரிவுகளை நீக்குவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். இல்லையெனில், ஒவ்வொரு அரசு மாறும்போதும் அவதூறு வழக்குகள் தொடரப்படுவதோடு, ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூத்த வழக்கறிஞர் கீதா ராமசேஷன் கூறும்போது, “தமிழ கம் மட்டுமல்லாமல் பிற மாநி லங்களிலும் அரசை விமர்சித்து பேசினால் குற்றவியல் அவதூறு வழக்குகள் தொடரப்படுகின்றன. இந்நிலையில், அரசாங்கத்தை விமர்சித்து பேசுவது எப்படி அவ தூறாகும் என உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தால் அரசின் கொள்கை, நடவடிக்கைகள் குறித்து ஆரோக் கியமான விமர்சனங்களை தைரி யமாக கூற முடியும் என்ற சூழல் இனி உருவாகும். அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டாலும், குறிப்பிட்ட ஒரு ஊடக்தின் மீது அவதூறு வழக்கு தொடரலாம் என்ற நிலைதான் தற்போது உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, இதை வரவேற்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x