Published : 04 May 2017 09:21 PM
Last Updated : 04 May 2017 09:21 PM

போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 15-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. 13-வது புதிய ஊதிய ஒப்பந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7-ம் தேதி குரோம்பேட்டை பணிமனையில் நடந்தது. இதில், பங்கேற்க தொழிற்சங்க நிர்வாகிகள் புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், நஷ்டத்தில் இருந்து மீட்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்நிலையில், 13வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் இன்று நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் போக்குவரத்து துறை செயலர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே தலைமையில் பேச்சுவார்த்தைக்கான கூட்டம் நடைபெற்றது.

சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து தேதி அறிவிக்கப்படாத நிலையில் கூட்டம் முடிவடைந்தது. கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொள்ளாதது தொழிற்சங்கத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்க கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் பல்லவன் சாலையில் நடைபெற்றது.

தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி.,எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., டி.எம்.டி.எஸ்.பி.,பி.டி.எஸ்., எம்.எல்.எப்.,ஏ.ஏ.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x