Published : 30 Jun 2016 03:51 PM
Last Updated : 30 Jun 2016 03:51 PM

காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த ஓசூர் காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும், முனுசாமியின் மகள் ரக்‌ஷனாவின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான அரசாணையையும் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' கிருஷ்ணகிரி மாவட்டம், யு.சிங்கிரிப்பள்ளி என்னும் இடத்தில் 15.6.2016 அன்று நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை பிடிக்க முற்படும் போது, அவர்கள் கத்தியால் தாக்கியதில் ஓசூர் காவல் நிலைய தலைமைக் காவலர் முனுசாமி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை அவரது மனைவி முனிலட்சுமியிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும், எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப் படிப்பிற்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள முனுசாமியின் மகள் ரக்‌ஷனாவின் மருத்துவக் கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு வெளியிட்ட அரசாணையினை முதல்வர் ஜெயலலிதா ரக்‌ஷனாவிடம் வழங்கினார்.

முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ரூ.1 கோடிக்கான நிவாரண உதவித் தொகையை பெற்றுக் கொண்ட தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்தினர், நிவாரண உதவித் தொகை வழங்கியமைக்காகவும், மகளின் மருத்துவக் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளதற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x