

தமிழகத்தில் கனமழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
2 நாட்களுக்கு மழை:
கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும். இன்று பல இடங்களிலும், நாளை ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்யும் என்று என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அது தென் மேற்கு வங்கக் கடலில் இன்னமும் காற்றழுத்த தாழ்வு நிலையாகவே நீடிக்கிறது. இதனால், தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யக் கூடும். கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புண்டு. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. எனவே, அடுத்த 2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும்.
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை காலை வரை பதிவான மழை அளவு படி, அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத் தூர், மதுரை ஆகிய இடங்களில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 11 செ.மீ., மதுரை மாவட்டம் பேரையூரில் 9 செ.மீ., மதுரை மாவட்டம் திருமங்கலம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய இடங்களில் 8 செ.மீ., தேனி மாவட்டம் கூடலூர், உத்தமபாளையத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் இதுவரை 259.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 34 சதவீதம் அதிகமாகும். இதுவரை தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரியைவிட அதிக மழை பெய்திருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.