டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்: முத்துகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்த சேலத்தில் காத்திருக்கும் உறவினர்கள்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்: முத்துகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்த சேலத்தில் காத்திருக்கும் உறவினர்கள்
Updated on
1 min read

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்து கிருஷ்ணன் மர்ம மரணத்தைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான சேலத்துக்கு கொண்டு வரப்பட உள்ளதால், அவரின் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் திரளாகக் காத்திருக்கின்றனர்.

சேலம், சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி அலமேலு. இவர்களது மகன் முத்துகிருஷ்ணன்(24) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நவீன வரலாறு குறித்த ஆராய்ச்சி பட்டமேற்படிப்பை படித்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு திடீரென மர்மமான முறையில் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் முத்துகிருஷ்ணன் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடந்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், டெல்லி மருத்துவமனையில் முத்து கிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனை செய்து பின்னர் விமானம் மூலம் சேலத்துக்கு கொண்டுவர அவரது தந்தை ஜீவானந்தம் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சேலத்தில் முத்துகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது உறவினர்களும், நண்பர்களும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் காத்திருக்கின்றனர். சேலம், சாமிநாதபுரத்தில் உள்ள முத்துகிருஷ்ணனின் வீட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சென்று, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இன்று அதிகாலைக்குள் முத்துகிருஷ்ணன் உடல் சேலம் கொண்டுவரப்படும் என்பதால், அவரது வீட்டின் அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இறுதி அஞ்சலி கூட்டம் முடிந்து, மயானத்துக்கு முத்துகிருஷ்ணன் உடலை கொண்டுசெல்லும் வரை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in