

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 750 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் அடிக்கடி பைக் மற்றும் கார் பந்தயம் நடப்பதாகவும், அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை 8 மணிவரை வாகன தணிக்கை நடத்தினர். இதில் வேகமாக வாகனம் ஓட்டியதாக 750 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.