அலங்காநல்லூர் மக்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

அலங்காநல்லூர் மக்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்
Updated on
2 min read

அலங்காநல்லூரில் மக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசும், காவல்துறையும் கடைபிடித்த வழிமுறை மிகவும் அநாகரீகமானது; கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தி இளைஞர்கள் மீது காவல்துறையினர் மிக மோசமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அறவழியில் போராடிய இளைஞர்களையும், பொதுமக்களையும் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையினரின் மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றதாகும். கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நம்பிக்கையளித்த மத்திய, மாநில அரசுகள் கடைசி நேரத்தில் அனுமதி அளிக்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்தன.

இதனால் கொந்தளிப்பின் உச்சிக்கு சென்ற அலங்காநல்லூர் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு ஆதரவு அளித்தனர். அவர்களின் கோரிக்கை, முழு அளவில் இல்லாவிட்டாலும் அடையாளமாகவாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதுதான். குறைந்தபட்சம் 5 காளைகளையாவது வாடிவாசல் வழியாக அவிழ்த்து விட வேண்டும் என்று அவர்கள் மன்றாடினர். ஆனால், அதைக் கூட ஏற்காமல் அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

அலங்காநல்லூரில் மக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசும், காவல்துறையும் கடைபிடித்த வழிமுறை மிகவும் அநாகரீகமானது; கண்டிக்கத்தக்கது ஆகும்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை வழங்க முன்வந்த போது, அவற்றை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, உணவு தர முன்வந்த உள்ளூர் பெண்களையும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களையும் தொடர்புபடுத்தி கொச்சையான வார்த்தைகளை காவல்துறையினர் உதிர்த்துள்ளனர். தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றும் எவரும் இதுபோன்ற இழிசெயலில் ஈடுபட மாட்டார்கள். இத்தகைய செயல்களில் ஈடுபட்டதன் மூலம் மிகவும் மோசமாக தமிழக காவல்துறை நடந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர்ந்து 21 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் இன்று காலை கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலும், சென்னை மெரினா கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களை ஒடுக்குவதற்காக மிரட்டல் மற்றும் ஒடுக்குமுறையை காவல்துறையினர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இத்தகைய அணுகுமுறையை கைவிட வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் உணர்வுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய தமிழக அரசு பீட்டா அமைப்பின் கையாளாக மாறி ஒடுக்குமுறையில் ஈடுபடுவது முறையல்ல. இதே ஜல்லிக்கட்டு சிக்கலில் ஆந்திர அரசு அம்மாநில மக்களின் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பு அளித்தது என்பதை பார்த்தாவது தமிழக ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனைவரையும் தமிழக ஆட்சியாளர்கள் விடுதலை செய்ய வேண்டும்; அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அனுமதிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in