

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று திக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரசுப் பணியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முதுநிலை கல்வி பெறுவதற்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 17-ம் தேதி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
முதுநிலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் அதிகம் தேவைப்படும் காலகட்டம் இது. 2 ஆண்டுகள் கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு மேல்படிப்பு படிக்க ஊக்கம் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். இந்நிலையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அரசு பணியாற்றும் மருத்துவர்களிடம் மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்திவிடும்.
இந்த சமூக அநீதியை தடுத்து நிறுத்திட தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.