எவராலும் வெல்லமுடியாத தலைவர் கலைஞர் - திருமாவளவன் புகழாரம்

எவராலும் வெல்லமுடியாத தலைவர் கலைஞர் - திருமாவளவன் புகழாரம்
Updated on
2 min read

எவராலும் வெல்லமுடியாத தலைவர் கலைஞர் என்று விசிக தலைவர் திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு திருமாவளவன் வெளியிட்ட வாழ்த்துச் செயதியில், ''தமிழக அரசியல் களத்தில் எவராலும் வெல்லமுடியாத தலைவராக விளங்குபவர் தலைவர் கலைஞர். 94-வது பிறந்தநாள் காணும் கலைஞருக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

80 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டும், கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியும் வருகின்ற தலைவர் கலைஞர் 94-வது அகவையை தொடுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்து சமூக நீதிக்காக சமராடிய தலைவர் கலைஞர் 100 ஆண்டுகளை தாண்டியும் வாழ்ந்து வழிகாட்டவேண்டும் என வாழ்த்துகிறோம்.

தலைவர் கலைஞருக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்ததும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதுதான் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

தமிழகத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலம் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன. தலித் மக்களின் மண்ணுரிமையை மீட்டு பஞ்சமி நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கவேண்டுமென தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் வலியுறுத்தினோம். நெல்லையில் மண்ணுரிமை மாநாடு கூட்டி அதில் சிறப்பு பேச்சாளராக தலைவர் கலைஞரை கலந்துக்கொள்ளச் செய்தோம்.

பஞ்சமி நிலம் தொடர்பான விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்று ஓய்வுப்பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தலைவர் கலைஞர் அமைத்து தந்தார். ஆட்சி மாற்றத்தினால் அந்த ஆணையம் முடக்கப்பட்டாலும் தலித் மக்களின் மண்ணுரிமைக் கோரிக்கைக்கு அவர் அளித்த மதிப்பு மறக்கமுடியாதது.

விடுதலைச்சிறுத்தைகள் கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகளின் ஒரு விழுக்காடு இடங்களை உயர்த்தித்தர முதல்வராக இருந்தபோது தலைவர் கலைஞர் உத்தரவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் போலவே சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் அந்தத் தொகுதியில் உள்ள தலித் மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மேம்பாட்டு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக தலித் மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்தது அவர்தான். தலித்துகளுக்கான நலத் திட்டங்கள் எல்லாவற்றையும் தலித் கிறித்தவர்களுக்கும் விரிவுப்படுத்தியது அவரது சாதனைதான்.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இன்றைக்கு பேசிவரும் அனைவருக்கும் ஊக்கமாக திகழ்ந்தவர் தலைவர் கலைஞர். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர். மத்திய அரசால் ஆட்சியை இழந்தவர். அவர்களது பிரச்னையை உலகறிய செய்யும் பொருட்டு 'டெசோ' என்கிற அமைப்பை உருவாக்கி இந்தியாவில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் அதைப்பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர்.

இலங்கை இனப்படுகொலை நடந்து 8 ஆண்டுகள் ஆனப்பிறகும் இலங்கைத் தமிழர்கள் எந்தவொரு அரசியல் உரிமைகள் அற்றவர்களாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு உலகளாவிய ஆதரவு தேவையாக இருக்கிறது. டெசோ அமைப்பு மீண்டும் புத்துணர்வோடு செயல்படவேண்டிய அவசியம் அதிகரித்திருக்கிறது.

தந்தை பெரியாரின் வழிவந்த தலைவர் கலைஞர் ஒருபோதும் வகுப்பு வாதத்தோடு சமரசம் செய்து கொண்டதில்லை. இந்தியாவை வகுப்புவாத பகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த பகையை கருக்கும் கருத்தியல் நெருப்பாக தலைவர் கலைஞர் திகழ்கிறார். அவர் நீடு வாழ்ந்து தமிழ்ச் சமூகத்திற்கு வாழவேண்டுமென உளமாற வாழ்த்துகிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in