

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி கடந்த பத்து ஆண்டுகளாக பயன் பாட்டில் இல்லை. இந்நிலையில் அந்தப் பள்ளி தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ராயப்பேட்டை சைவ முத்தையா 6வது தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த பள்ளி மூடப்பட்டது. தேர்தலின்போது மட்டும் தரைதளத்தில் இருக்கும் அறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் பயன்பாடற்று கிடக்கும் பள்ளிக் கட்டிடத்தை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
அப்பகுதியில் வசிக்கும் அமுதா இதுபற்றி கூறும்போது, “போதைப் பொருட்கள் உட்கொள்வது போன்ற செயல்களுக்கு பள்ளியின் வகுப்பறைகளை சிலர் பயன் படுத்தி வருகின்றனர். அதனால் இங்கு வசிக்கவே பயமாக இருக்கிறது. இந்த கட்டிடத்தை முறையாக பராமரித்தால், வேறு எதற்காகவாவது பயன்படுத்தலாம்” என்றார்.
பள்ளிக்கு அருகில் வசிக்கும் சிவகாமி கூறும்போது, “ பள்ளி வளாகம் திறந்தே இருப்பதால், யார் வேண்டுமானாலும் உள் நுழைய முடிகிறது. சிலர் வகுப்பறைகளின் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்து விடுகிறார்கள். காவல் துறையினர் எப்போதாவது சோதனையிட வந்தால் அவர்கள் தப்பி ஓடிவிடுகிறார்கள். மீண்டும் அடுத்த நாளே வந்து விடுகின்றனர். அந்த கட்டிடத்தில் மீண்டும் பள்ளி செயல்பட்டால் இங்குள்ள மக்களுக்கு உபயோகமாக இருக்கும்” என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, “மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் பள்ளி மூடப்பட்டது. அந்த கட்டிடத்தில் தையல் பயிற்சி உள்ளிட்ட மாநகராட்சியின் சமூக கல்லூரி யின் பயிற்சிகள் சிலவற்றை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.