வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக எதிர்ப்பு: சசிகலா புஷ்பாவின் வழக்கு முடித்துவைப்பு- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக எதிர்ப்பு: சசிகலா புஷ்பாவின் வழக்கு முடித்துவைப்பு- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

அதிமுக பொதுச் செயலாள ராக வி.கே.சசிகலா நியமிக்கப் படுவதை எதிர்த்து சசிகலா புஷ்பா எம்.பி. தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட் டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப் பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக் கல் செய்திருந்தனர். ‘அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமிக்கக்கூடாது. அதற்காக அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டுவரக் கூடாது’ என அதில் கோரியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுவில், ‘சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, வி.கே.சசிகலா வுக்கு எதிராக அவர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஏற்கெனவே நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நடந்தது. அப்போது அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சசிகலா புஷ்பா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் நேற்று உத்தரவு பிறப்பித்தார். ‘இந்த வழக்கில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த நிராகரிப்பு மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் தாக்கல் செய்த பிரதான மனு முடித்துவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை வரவேற்று, உயர் நீதிமன்றத்துக்கு வெளியே அதிமுக எம்.பி. நவநீதகிருஷ் ணன், அதிமுக வழக்கறிஞர் அணித் தலைவர் சேதுராமன், வழக்கறிஞர் செந்தில் தலைமை யில் அதிமுக வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

‘சசிகலா’ பெயரை உச்சரிக்காத எம்.பி.

உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் நவநீதகிருஷ்ணன் எம்.பி. பேசும்போது, ‘‘திருமதி புஷ்பா தொடர்ந்த வழக்கில், அதிமுக சார்பில் அவைத் தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், புஷ்பாவின் மனுவை முடித்துவைத்துள்ளது’’ என்றார். இதில், சசிகலா புஷ்பா என்ற பெயரைக்கூட அவர் ‘புஷ்பா’ என்றே கூறினார். அப்போதுகூட ‘சசிகலா’ என்ற பெயரை அவர் உச்சரிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in