

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கடந்த 16-ம் தேதி வாடிவாசலில் காளைகளை திறந்துவிட மறுத்ததால் அலங்காநல்லூரியில் தொடக்கப்புள்ளியாக தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு இன்று தமிழகமே குரல் கொடுக்கிறது. அலங்காநல்லூர் மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் நேற்று 5-வது வாளாக தொடர்ந்து 120 மணி நேரமாக வாடிவாசல் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் விடுமுறை, வியாபாரி கள் கடையடைப்பால் பாலமேடு, அவனியாபுரம், வலசை, பண் ணைப்பட்டி, ஊமைச்சிகுளம், அழகர் கோயில் உட்பட 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் நேற்று காலை 7 மணி முதல் பல்வேறு இடங்களில் இருந்து நடைபயண மாக அலை அலையாக அலங்காநல்லூர் வந்தனர்.
அவர்களை அலங்காநல்லூர் மக்கள் வரவேற்று, போராட்டத்தில் அமர வைத்தனர். பள்ளிகள் விடுமுறையால் வீடுகளில் முடங்கி விடாமல் ஆசிரியர்கள் 800-க்கும் மேற்பட்டோர், அந்தந்த பகுதியில் இருக்கும் தொடக்கக்கல்வி, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து ஊர்வலமாக அலங்காநல்லூருக்கு நடந்தே வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்ததால் அலங்காநல்லூரில் லட்சம் பேர் திரண்டனர்.
இந்நிலையில் நேற்று காலை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘அவசரச் சட்டம் நிறைவேற்றப்படுகிறது, ஒரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்’ என உறுதியளித்து போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தார். இதை தொலைக்காட்சிகள் மூலம் பார்த்த அலங்காநல்லூர் மக்கள், முதல்வர் கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், “அவசர சட்டம், அவசர கதியில் நிறைவேற்றப்படுகிறது. மீண்டும் நீதிமன்றத்தில் சிக்கல் ஏற்படுத்தலாம், 4 நாள், 5 நாள் கூட பொறுமையாக எடுத்துக்கொள்ளுங்கள், அதுவரை நாங்களும் போராட் டத்தில் காத்திருக்கிறோம், நிரந்தர கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த ஆட்சியர் கொ.வீரராகவராவ், ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு உள்ளது, அதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என மக்களை சமாதானம் செய்து பேச்சு நடத்தினார். ஆனால், இதை ஏற்க மறுத்து அலங்காநல்லூரை விட்டு கலையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.