Published : 27 Jul 2016 08:41 AM
Last Updated : 27 Jul 2016 08:41 AM

சுவாதி வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டு ராம்குமாரை சிக்கவைக்க போலீஸார் சதி: வழக்கறிஞர் பி.ராமராஜ் குற்றச்சாட்டு

சுவாதி கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டு, ராம்குமாரை சிக்க வைக்க போலீஸார் சதி செய்வ தாக ராம்குமாரின் வழக்கறிஞர் பி.ராமராஜ் தெரிவித்தார்.

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்குமாரை போலீஸார் ஏற்கனவே 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தற்போது, மீண்டும் போலீஸ் காவல் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய் யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி ஆணையர் தாக்கல் செய்த மனுவில், ‘‘சுவாதி கொலையில் கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி, அதை ராம்குமார் முன்னிலையில் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. எனவே அவரை மீண்டும் போலீஸ் காவலில் விட அனுமதிக்க வேண்டும்’’ என கோரப்பட்டு இருந்தது.

14-வது குற்றவியல் நடுவர் (பொறுப்பு ) கோபிநாத் முன்பு இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. போலீஸாரின் கோரிக்கைக்கு ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் பி.ராமராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, விசாரணை 28-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் பி.ராமராஜ், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நாங்கள் சிபிஐ விசாரணை கோரியுள்ளதால், போலீஸார் பதற் றம் அடைந்துள்ளனர். அதனால், உண்மை குற்றவாளிகளை தப்ப வைத்துவிட்டு, ராம்குமாரை சிக்க வைக்க தற்போது மீண்டும் போலீஸ் காவல் கோரி சதி செய்கின்றனர்.

அந்த மனுவில், ஜூலை 1-ம் தேதி இரவு 7.15 மணிக்கு ராம்கு மார் சென்னையில் உள்ள மேன் ஷனில் இருந்ததாக விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அன்று இரவு 11.30 மணிக்குதான் செங்கோட்டை அருகே உள்ள தனது கிராமத்தில் ராம்குமார் கழுத்தறுபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் ராம்குமார் தானாகவே கழுத்தை அறுத்துக்கொண்டதால் , பெற்றோர் அவரை பாளை யங்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்குதான் ராம்குமாரை கைது செய்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் யாரைக் காப்பாற்ற போலீஸார் முன்னுக்குப்பின் முரணான தக வல்களைத் தருகின்றனர் என தெரியவில்லை.

மேலும், 4 இடங்களில் வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சுவாதி இறந்துள்ளார். கொலை செய்வதை தொழிலாக கொண் டவர்தான் இந்த கொடூரத்தை செய்ய முடியும். தவிர, நேரில் பார்த்த சாட்சியம் இருப்பதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார். அந்த சாட்சிகளை இதுவரை விசாரிக்கவில்லை. தற்போது வீடியோ ஆதாரங்களுடன் ராம்கு மாரை ஒத்துப்போகச் செய்வதற் காகவே, போலீஸார் மீண்டும் காவல் கோரியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x