Published : 06 Apr 2014 10:29 AM
Last Updated : 06 Apr 2014 10:29 AM

காங்கிரஸுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பிரச்சாரம்

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாக, நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் மற்றும் சமூக சமத்துவப் படையின் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், நடிகர் கார்த்திக்கும், சிவகாமியும், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை நேற்று நேரில் சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய ஞானதேசிகன், “கார்த்திக்கும், சிவகாமியும், மதசார்பற்ற ஆட்சி வரவேண்டுமென்ற எண்ணத்தில், மத்திய அரசின் சாதனைகளைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய முன் வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் காங்கிரஸ் சார்பில் இம்முறை தொகுதி தர முயற்சித்தோம். ஆனால் காலதாமதத்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தாலும் அவர்களுக்கு தொகுதிகள் வழங்க முடியவில்லை” என்று கூறினார்.

நடிகர் கார்த்திக் பேசுகையில், “உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, பெரும்பாலான வல்லரசு நாடுகளே தடுமாறியபோது, இந்தியா அதை சமாளித்தது. அப்படிப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீண்டும் வர விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் வரும் போது, கோயிலுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. இந்தக் கோயிலிலிருந்து இந்த பக்தன் ஒரு போதும் வெளியேற மாட்டான்.

நான் சென்னையிலேயே வளர்ந்தவன். இது எனது மண். இந்தத் தலைநகரில் கூட நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருக்க முடியும். ஆனால், ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸில் கட்சியினர் இடையே வருத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, மற்றவர்களின் இடத்தைப் பிடிக்கும முயற்சியைத் தவிர்த்து விட்டேன்” என்று கூறினார்.

தேர்தலின்போது மட்டும் வெளியே தெரிகிறீர்களே, மற்ற நாட்களில் கட்சி செயல்பாடுகள் தெரிவதில்லையே என்று நிருபர்கள் கார்த்திக்கிடம் கேட்டனர். அதற்கு அவர் “நாங்கள் விளம்பரம் தேடாமல் பல பணிகளை செய்கிறோம். எங்கள் சாதனைகள், பணிகள் குறித்து தனியாக புத்தகமே உள்ளது. சுய விளம்பரம் எனக்குப் பிடிக்காது” என்றார்.

பி.சிவகாமி பேசுகையில், “நாங்கள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது திடீர் முடிவு அல்ல. தேமுதிக காங்கிரஸுடன் சேரும் என்று எதிர்பார்த்து, அவர்களுடன் பேசினோம். ஆனால் தேமுதிக காங்கிரஸ் கூட்டணிக்கு வராததால், நாங்கள் அவர்களை ஆதரிக்காமல், காங்கிரஸுக்கு ஆதரவு தருகிறோம். காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினேன். சீட் கிடைக்கவில்லை என்ற வருத்தம் முன்பு இருந்தாலும், அது இப்போது இல்லை. காங்கிரஸ் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x