Published : 08 Dec 2014 03:17 PM
Last Updated : 08 Dec 2014 03:17 PM

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?- மதிமுக விளக்கம்

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது குறித்த காரணங்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுடனான நெருக்கம், மீனவர் பிரச்சினையில் மெத்தனம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, காவிரியில் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவு ஆகிய விவகாரங்களில் தமிழகத்திற்கு விரோதமான முடிவுகளை எடுப்பது, தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை புறக்கணித்தது, கச்சத் தீவு விவகாரம் முடிந்துபோன பிரச்சினை என கூறியிருப்பது போன்ற பாஜக நிலைப்பாடுகளால் அக்கூட்டணியில் இனியும் நீடிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மதிமுக உயர்நிலைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

"2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக இடம்பெற்றது.

ஆனால், தமிழ்க்குலத்துக்கு எதிராக துரோகச் செயல் புரிந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு முழு எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அக்கூட்டணியில் இருந்து விலகியது.

இனி, இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசு அமைய வேண்டும்; ஈழத்தமிழர்களுக்குச் செய்கின்ற துரோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே அமையப் போகின்ற மத்திய அரசு மேற்கொள்ளச் செய்திட வேண்டும் என்று மதிமுக தீர்மானித்தது. இந்தச் சூழ்நிலையில்,பாரதிய ஜனதா கட்சி, மதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியது.

1998 இல் இருந்து 2004 வரை பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் சிங்கள அரசுக்குத் துளியும் உதவுவது இல்லை என்று முடிவு எடுத்துச் செயல்படுத்தினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சிங்கள அரசுக்கு ஆயுதங்களை விற்பனை கூடச் செய்ய மாட்டோம் என்று முடிவு எடுத்து அறிவித்தார். பன்னாட்டுக் கடல் பரப்பில் விடுதலைப்புலிகளுக்காகச் செல்லும் கப்பல்களை இந்தியக் கடற்படை தடுப்பது இல்லை என்ற துணிச்சலான முடிவையும் மேற்கொண்டார்.

பாஜக - மதிமுக கூட்டணி அமைய வேண்டுமானால், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஈழப்பிரச்சினையில் வாஜ்பாய் மேற்கொண்ட நிலைப்பாட்டையே செயல்படுத்திட வேண்டும் என்று, வலியுறுத்தப்பட்டது. அதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இடம் பெற்ற நிலையில், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நரேந்திர மோடியை சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினையில் அடல் பிகாரி வாஜ்பாய் அரசு கையாண்ட அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதற்கும் எந்த மறுப்பும் தெரிவிக்கவிக்கப்படவில்லை. கூட்டணியும் அமைந்தது.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. மோடி, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, சிங்கள அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டு இருக்கின்றார் என்ற தகவல் வந்தவுடன் பதவி ஏற்பு விழாவிற்கு ராஜபக்சேயின் வருகையைத் தவிர்க்க வேண்டும் என்று அறிக்கை விடுக்கப்பட்டது.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்து, 2014 மே 26 அன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்றார். இதற்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ராணுவ ஆலோசனை மாநாட்டில், பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்ட இருவர், அந்தக் கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு ஆதரவாகவும் நச்சுக்கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்தியாவின் கடற்படைத் தளபதி கொழும்புக்குச் சென்று தமிழ் இனக் கொலைகாரன் இராஜபக்சேயைச் சந்தித்து, ‘உங்களிடம் இருந்துதான் இந்திய இராணுவம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று இந்தியாவுக்கு அவமானத்தைத் தேடித்தரும் விதத்தில் கூறினார்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்று, மேலும் ஓர் அக்கிரமம் நடந்தது. ராஜபக்சேவுக்கு, இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ஒரு புல்லுருவி தந்த அறிக்கைக்கு, பாரதிய ஜனதாவின் தலைமை எந்த மறுப்பும் வெளியிடவில்லை.

தமிழ் இனத்திற்கு பாரதிய ஜனதா அரசு செய்யும் துரோகங்களின் உச்சகட்டமாக, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு நகரில், 26.11.2014 இல் நடைபெற்ற சார்க் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாட்டில், இந்தியாவின் சார்பில் பங்கேற்று உரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இலங்கையில் நடைபெற இருக்கின்ற அதிபர் தேர்தலில் மகிந்த இராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்று அதிபர் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வாழ்த்திய செயல், 1947 இல் இருந்து இந்தியப் பிரதமர்கள் இதுவரை கடைப்பிடித்து வந்த வெளியுறவுக் கொள்கை அணுகுமுறைக்கு முற்றிலும் மாறுபட்டதும், தவறானதும் ஆகும்.

இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க முடிவு எடுத்ததால்தான் சிங்கள அதிபரையும் அழைத்தோம்’ என்று அந்தக் கேடான செயலுக்கு நியாயம் கற்பிக்க முயன்ற பிரதமர் நரேந்திர மோடி அரசு, தமிழர்களின் மான உணர்வைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில், தமிழகத்தின் எல்லையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு ராஜபக்சே, 2014 டிசம்பர் 9 ஆம் நாள் வருவதற்கு ஏற்பாடு செய்து இருப்பது, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் புரிந்த தமிழ் இனத்தைக் கிள்ளுக்கீரையாக நினைக்கின்ற ஆணவப் போக்கு ஆகும்.

தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் புறக்கணிப்பு

‘இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; சுதந்திரத் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழகச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை அவமதிக்கும் விதத்தில் மத்திய அரசு சிங்கள அரசை உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

2015 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், சிங்கள அரசுக்கு ஆதரவாகவே இந்திய அரசு செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமஸ்கிருதத் திணிப்பு:

அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும்; முதல் கட்டமாக, உலகின் மூத்த முதன்மையான, தொன்மையான தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும்; ஆங்கிலமும் நீடிக்க வேண்டும் என்பதுதான், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மொழிக்கொள்கை ஆகும். இதுவே பேரறிஞர் அண்ணா வகுத்த கொள்கையும் ஆகும்.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி, விரல் விட்டு எண்ணக்கூடிய, ஒரு சில ஆயிரம் பேர்கள் மட்டுமே அறிந்துள்ள, வழக்கில் இருந்து ஒழிந்துபோன வடமொழியாம் சமஸ்கிருதத்தை, அனைத்து இந்திய மொழிகளின் தாய்மொழி என்று கூறி, கல்வித்துறையில் சமஸ்கிருதத்தைப் புகுத்தும் தீய நோக்கத்துடன் செயல்படுகிறது.

அக்கட்சியின் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அவர்கள், தில்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, ‘நரேந்திர மோடி அரசுக்கு ஆதரவாக வாக்கு அளிப்பவர்கள் மட்டுமே ராமனின் பிள்ளைகள்; மற்றவர்கள் எல்லாம், தவறான, முறைகேடான வழியில் பிறந்தவர்கள்’ என்று கூறியுள்ளார். இந்துத்துவா என்னும் ஆபத்தான கூடாரத்தில் இருந்து கருக்கொண்டதுதான் இத்தகைய நச்சுக் கருத்து ஆகும்.

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள்:

தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்குப் பேராபத்தை உருவாக்கும் விதத்தில் கேரள அரசு முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நல்லாறு, இடமலையாறு பிரச்சினையிலும், நெய்யாறு இடதுகரைக் கால்வாய் பிரச்சினையிலும், செண்பகவல்லி தடுப்பு அணை பிரச்சினையிலும், அமராவதி பிரச்சினையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இன்றைய நரேந்திர மோடி அரசு, முல்லைப்பெரியாறில் கேரளம் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசின் வன உயிரியல் துறை அனுமதி அளித்து இருப்பது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரானது மட்டும் அல்ல, நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம் ஆகும்.

கொங்கு மண்டலத்தில் 85 இலட்சம் மக்களுக்குக் குடிதண்ணீர் ஆதாரமாகவும், 60,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் ஆதாரமாகவும் விளங்கும் அமராவதி நதிக்கு வரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்த, கேரளத்தில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டு, மத்திய அரசின் அனுமதியைப் பெறாமலேயே கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தி, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. மத்திய அரசு அதைத் தடுப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது ஒகேனக்கல் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கர்நாடக முதல்வர் ஆணவத்தோடு கொக்கரிக்கின்றார். கர்நாடகத்தின் இந்த அநீதியான போக்கைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் திரு நரேந்திர மோடியின் அரசு முனையவே இல்லை.

கச்சத்தீவு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்தின் உரிமை பூமியான கச்சத்தீவை, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல், நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் இலங்கைக்குக் காங்கிரஸ் அரசு 1974 இல் தாரை வார்த்துக் கொடுத்தது. இதன் விளைவாகவே, தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரிய உரிமையான மீன்பிடித் தொழிலை, நமது கடலிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மேற்கொள்ள இயலாமல் துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், கச்சத்தீவு முடிந்து போன பிரச்சினை என்றும், அதில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் மதுரை நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து இருப்பது, மேலும் ஓர் துரோகம் ஆகும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயே சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், மீனவர்களின் வலைகளை அறுத்துப் படகுகளை உடைத்து நொறுக்குவதும், பன்னாட்டுக் கடல் பரப்பில் அவர்களைக் கைது செய்து கொண்டு போய்ச் சிறையில் அடைப்பதும் தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கின்றது. இதுவரை தமிழக மீனவர்கள் 578 பேர் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். இத்தாலிய வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு கேரள மீனவர்களின் குடும்பங்களுக்குத் தந்ததுபோல, தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு எந்தவிதமான நட்ட ஈடும் தரப்படவில்லை.

பாரதிய ஜனதா அரசு, கொலைகார சிங்கள அரசோடு கூடிக் குலாவி வருவதால், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அப்பாவிகளான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து, அவர்களை ராஜபக்சே மன்னித்து விடுதலை செய்வது போல ஒரு கபட நாடகத்தைத் திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கின்றனர்.

இந்தியத் தொழில்கள் நசிவு

பொருளாதார, தொழில் வணிகத்துறையில் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டுவதற்கு இடம் கொடுக்காமல், இந்தியாவின் கனரக, சிறுதொழில் துறையை ஊக்குவிக்கவும், தற்சார்பு நிலையை உறுதிப்படுத்தவும் செயல்படுவோம் என்று கூறி வந்த பாரதிய ஜனதா கட்சி, 2014 மே மாதத்தில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அரசுப் பொறுப்பு ஏற்றபின், வேளாண்மைத் துறையில் மரபு அணு மாற்றப் பயிர்களை அனுமதிக்கவும், வணிகத்துறையில் சிறுகடை உரிமையாளர்களை நசுக்கவும், காப்பீடு, இராணுவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெருமளவில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆக்டோபÞ கரங்களால் இந்திய மக்களின் தொழில்களை நசுக்கி கொள்ளை இலாபம் காணவும் எல்லா ஏற்பாடுகளையும் வேகமாகச் செய்து வருகின்றது.

"முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்திச் சென்றபோது தோழமைக் கட்சிகளுடன் கடைபிடிக்கப்பட்டு வந்த அணுகுமுறையின் அடையாளம் எதுவும் நரேந்திர மோடி அரசில் இல்லை.

எனவே, நடந்து முடிந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று இருந்த மதிமுக இனியும் பாரதிய ஜனதா கூட்டணியின் உடன்பாட்டையே, உறவையோ தொடர முடியாது என்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x