

புதுச்சேரி வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி குந்தகம் விளைவிக்கிறார். கோப்பு அனுப்பினால் ஒப்புதல் அனுப்பாதது நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்வதற்காகதான் என்று பகிரங்கமாக முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார். எந்த அதிகாரியும் அமைச்சர் உத்தரவு இல்லாமல் ஆளுநரை சந்திக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் தெரிவித்த தகவல் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் கடும் விவாதம் நடந்தது. அதன் விவரம்:
சிவா (திமுக):
எம்எல்ஏக்களை சங்கடப்படுத்தும் விதத்தில் ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார். வெளியில் தவறான எண்ணம் உருவாக்கப்படுகிறது. அவமானப்படுத்தும் நோக்கில் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களால் தேர்வான பிரதிநிதிகளை மதிக்காமல் செயல்படுகிறார். சபாநாயகர், முதல்வர் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு கொறடா அனந்தராமன்:
முதல்வருக்கு கேள்வி விடுத்துள்ளார். இடைவெளி இருந்தால் நேரில் பேசியோ, கடிதம் மூலமோ தெரிவிக்கலாம். பொறுப்பில்லா முறையில் சமூக வலைத்தளங்களில் கேள்வி விடுப்பதும் எம்எல்ஏக்கள் மீது தவறான தகவல் பதிவு செய்வதும் தான்தோன்றிதனம். அவையில் முடிவு எடுங்கள்.
ஆளுநரை விமர்சிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்துகிறீர்கள். மக்கள் போராட்டத்தை கட்டவிழ்த்து விடுவோம். அரசுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக வேறு எண்ணத்தோடு கருத்துகளை மறைமுகமாக திணிப்பதுபோல் உள்ளது. மக்கள் மீது அக்கறையில்லை என்ற மாயையை உருவாக்குகிறார். ஆளுநருக்கு முடிவு எடுக்காவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்.
அமைச்சர் கந்தசாமி:
தொடர்ந்து பேசி வருகிறோம். முதல்வர் போராடக்கூடாது என்கிறார். எத்தனை பிரச்சினையை ஆளுநர் தீர்த்துள்ளார்? எவ்வளவு நிதி வாங்கி தந்தார்? பிரதமர், குடியரசுத்தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். மக்கள் போராட்டம் தொடங்கினால் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படும். அதை ஆளுநர் விரும்புகிறார்.
முதல்வர் நாராயணசாமி:
ஓராண்டு காலம், அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநர் செயல்பாடு பற்றி சொன்னபோது கூட விதிமுறை கடைபிடித்து செயல்பட அறிவுறுத்தி வந்தேன். தொடர்ந்து உள்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் ஆளுநர் செயல்பாடு தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன். ஆளுநர் அதிகாரம் என்ன - அமைச்சர் அதிகாரம் என்ன என்பதை அவர்களுக்கு சட்டப்பூர்வமாக தந்துள்ளேன்.
எந்த மாநிலத்துக்கும் தனியாக சட்டம் இல்லை. யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியில் நிலம், நிதி, சட்டம் ஒழுங்கு மாநில அரசுக்கு அதிகாரமுள்ளது. ஆளுநரிடம் சென்று விளக்கமாக தெரிவித்தேன்.
அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும். துணைநிலை ஆளுநர் அமைச்சரவை ஆலோசனை கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக உள்துறைக்கு தெரிவித்துள்ளோம். தனிப்பட்ட அதிகாரம் ஆளுநருக்கு புதுச்சேரியில் இல்லை. அமைச்சரவை முடிவு செய்வதை ஒப்புதல் தரவேண்டும். சிக்கலான பிரச்சினையில் கருத்து வேறுபாடு இருந்தால் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார். அனைத்து கோப்புகளையும் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்.
ஆளுநர் ரகசிய காப்பை மீறி டிவிட்டர், வாட்ஸ் அப்பில் தகவல் வெளியிடுகிறார். விமர்சனம் செய்யக்கூடாது என்ற நிலையில் இருந்தேன். தற்போது கட்டுமீறி ஆளுநர் செயல்படுவதால் பேசுகிறேன்.
விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன் ரத்து செய்ய முடிவு எடுத்தோம். சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், கூட்டுறவு கடன் ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்று ஆளுநர் குறிப்பிட்டார். நான் உண்டு என்றேன். அதைத் தொடர்ந்து விவசாயிகளின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடனை ரத்து செய்ய சொன்னார். அதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டேன்.
தமிழகம், கர்நாடகம், உ.பி உட்பட பல மாநிலங்களில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன் ரத்து செய்துள்ளனர். வறட்சி நிவாரணத்தில் மாநில அரசே முதலில் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு அனுமதியுள்ளது. ஓராண்டாக இவ்விவகாரம் நடக்கிறது.
விவசாயிகள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். மேலும், விவசாய கடனை ரத்து செய்ய அதிகாரமுள்ளது என்று சட்டத்துறை தெரிவித்தது.
விளம்பரம் செய்ய விரும்புகிறார்
மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றும் வேலையில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார். நாங்கள் கொடுக்க விரும்புகிறோம் அதை தடுக்க நீங்கள் யார்? என்று கேள்வியுடன் மீண்டும் கோப்பினை அனுப்பியுள்ளேன்.
தலித் மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டம் கொண்டு வர முடிவு எடுத்தோம். அக்கோப்பினை ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். சிறப்பு கூறு நிதியை உரிய மக்களுக்கு தர அதிகாரமுள்ளது. அதற்கான கோப்பை டெல்லிக்கு அனுப்பியுள்ளார். இது சேவையா? விளம்பரம் செய்யவே விரும்புகிறார். டிவிட்டர், பேஸ்புக்கில் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதுதான் ஆளுநருக்கு வேலை.
ஆளுநர் பொறுப்புடன் நடக்க வேண்டும். பணம் மரத்தில் காய்கிறதா என்று தரம் தாழ்ந்து ஆளுநர் என்பதை மறந்து பேசுகிறார். அதிகாரிகளை அழைத்து மக்கள் மத்தியில் திட்டுவது- அசிங்கப்படுத்துவது என தரம் தாழ்ந்த வேலையில் இறங்கியுள்ளார்.
வீட்டு வேலை செய்ய அழைப்பது போல் அமைச்சரை அழைக்க ஆளுநர் கூறுகிறார். அமைச்சரை பேர் சொல்லி ஆளுநர் அழைக்கிறார். அவர் எல்லைக்குள் செயல்பட வேண்டும்.
அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை அயோக்கியன் லஞ்சம் வாங்குவதாக பேசுகிறார்.
மருத்துவக்கல்லூரி இடங்களை தனியாருக்கு தாரைவார்த்து தரப்பட்டதாக சொன்னார்கள். அதிகாரிகளை குறை சொல்லக் கூடாது வீட்டில் வேலைக்காரர் போல் நடத்துகிறார்.
மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. உங்களுக்கு என்ன அதிகாரமுள்ளது. கோப்பைதான் நிறுத்துவீர்கள். ஓராண்டாக வாய் திறக்காமல் இருந்தேன்.
பசுமை தீர்ப்பாயத்தில் குப்பை பிரச்சினை தொடர்பாக வழக்கு உள்ளது. புதுச்சேரி அரசுக்கு தண்டனை தர கடிதம் நீதிபதிக்கு எழுதுகிறார். கடும் கண்டனம் நீதிமன்றம் தெரிவித்தது. பதவிக்கு தகுதி இல்லாத நிலையில் இருக்கிறார்.
அதேபோல் நெல்லித்தோப்பு தேர்தல் நடக்கும்போது அதிகாரிகளை அழைத்து பேசுவதாக புகார்கள் வந்தது. தேர்தல் விதிமுறைகள் இருப்பதால் அதிகாரிகளை அழைத்து பேசினார் ஆதாரத்துடன் புகார் தரப்பட்டது. தேர்தல் ஆணையம் கண்டித்தது.
அதிகாரிகளுக்கு உத்தரவு
எந்த அதிகாரியும் அமைச்சர் உத்தரவு இல்லாமல் ஆளுநரை சந்திக்கக்கூடாது. எம்எல்ஏக்களிடம் சொல்லாமல் தொகுதிக்குள் ஆளுநர் வந்தால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மறியல் செய்ய வேண்டும். 24 மணிநேரமும் வேலை செய்வது எம்எல்ஏக்கள்தான்.
மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இடங்களையும் முதுநிலைப்படிப்பில் மாணவர் களுக்கு ஒதுக்குவதாக ஆளுநர் கூறினார். அவரால் வாங்கி தர முடிந்ததா என்பது கேள்விக் குறிதான். இவ்விஷயத்தில் அதிகாரம் இல்லை என்று சட்டத்துறை தெரிவித்துள்ளது. முதல்வர், அமைச்சரை அழைத்து பேசாமல் செயல்படுகிறார்கள். நிதியை திட்டமிட்ட செலவுகள்தான் செய்துள்ளோம். 94 சத நிதியை செலவு செய்தோம். அதிகார எல்லைக்குள் செயல்பட வேண்டும். இல்லையேல் அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி சட்டப்பேரவை கூடும் போதுதலையிட ஜனாதிபதிக்கே அதிகாரம் இல்லாத போது அவரது ஏஜென்டுக்கு என்ன அதிகாரம் உள்ளது.
ஆளுநர் புதுச்சேரி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார். கோப்பு அனுப்பினால் ஒப்புதல் அனுப்பாதது நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்வதற்காகதான். எல்லைக்குள் வரம்புக்குள் நடக்க வேண்டும். வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டரில் உத்தரவுகளை அனுப்பக்கூடாது. ஆளுநர் தனது எல்லைக்குள் செயல்படவேண்டும். என்று முதல்வர் குறிப்பிட்டார்.