Last Updated : 24 Feb, 2017 11:36 AM

 

Published : 24 Feb 2017 11:36 AM
Last Updated : 24 Feb 2017 11:36 AM

அடிக்கல் நாட்டி ஓராண்டாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை: கரூர் அரசு மருத்துவக் கல்லூரியால் முடங்கியது ரூ.229.46 கோடி

கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி ஓராண்டாகியும் கல்லூரி கட்டிடப் பணிகள் தொடங்கப்படாததால் இதற்கென ஒதுக்கப்பட்ட ரூ.229.46 கோடி முடங்கியுள்ளது.

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. கரூர் அருகேயுள்ள வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக தனியாரால் 25 ஏக்கர் இடம் தானமாக வழங்கப்பட்டது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கென முதல்வர் நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கரூர் அரசு மாவட்ட தலைமை மருத்துமனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.229.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் உள்ள இடம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அதிக தொலைவில் இருப்பதாகக்கூறி மாற்று இடம் தேடும் பணி தொடங்கியது. மேலும், வாங்கல் குப்புச்சிபாளையம் இடம் தனியார் நிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது, வழியில் 3 மயானங்கள், புதை சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இருந்தன. மேலும், அந்த இடம் கரூர் நகராட்சி குப்பைக் கிடங்கின் பின்பகுதியில் அமைந்திருந்தது. மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதற்காகவே இந்த இடம் வாங்கப்பட்டு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக வாங்கல் குப்புச்சிபாளையம் இடம் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வருவாய்த் துறை மூலம் கோடங்கிப்பட்டி அருகே ஆச்சிமங்கலத்தில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான 25 ஏக்கர் இடம் பார்வையிடப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரிக்காக வாங்கல் குப்புச்சிபாளையத்தில் வழங்கப்பட்ட நிலத்தை பரிவர்த்தனை முறையில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு வழங்க முடிவு செய்யப்பபட்டது.

ஆனால், மருத்துவக் கல்லூரிக்காக தானமாக வழங்கப்பட்ட இடத்தை வேறு உபயோகத்துக்கு பயன்படுத்த முடியாது என்பதால் அம்முயற்சி பலனளிக்கவில்லை. அதற்குப் பதிலாக பட்டுக்கோட்டை அருகே உள்ள அரசு இடத்தை ஆதீனத்துக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சியும் கைகூடவில்லை.

இந்நிலையில், சணப்பிரட்டியில் உள்ள கரூர் நகராட்சிக்குச் சொந்தமான 16.49 ஏக்கர் இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதென முடிவு செய்யப்பட்டு, கரூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடந்த மார்ச் 1-ம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கடந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் சணப்பிரட்டியில் மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அதுவும் கைவிடப்பட்டது.

மருத்துவக் கல்லூரி அமைவிடத்தை மாற்றியதை அடுத்து வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரிக்கு நிலத்தை தானமாக வழங்கியவர், மருத்துவக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க குறைந்தபட்சம் 20 ஏக்கர் இடம் வேண்டும் என மருத்துவ கவுன்சில் கேட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட்டில் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது. இதனால், கட்டுமான பணிகளை தொடங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் கடந்த 6 மாதங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

சணப்பிரட்டியில் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இடத்தருகே நகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் இடம் உள்ளது.

பூங்கா அமைக்க இந்த இடம் ஒதுக்கப்பட்டு, தற்போது பூங்கா பணிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. எனவே, அந்த இடத்தை மருத்துவக் கல்லூரிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கல்லூரிக்கு 3 ஆண்டுகள் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடமே மருத்துவக் கல்லூரி அமைக்க போதுமானது என்ற கருத்தும் நிலவுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5 ஏக்கர் இடம் தேவை என்ற நிலையில் தற்போதைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 4 ஏக்கரில் அமைந்துள்ளதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஒட்டியுள்ள கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து 1 ஏக்கர் இடத்தைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சணப்பிரட்டியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்ற கருத்தும் உள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும், நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டி ஓராண்டாகியும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

எனவே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி பணிகளை உடனே விரைந்து தொடங்கி 2018- 19-ம் ஆண்டிலாவது மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். மேலும், கல்லூரியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு அதிகளவிலான இட வசதி மற்றும் போக்குவரத்து வசதிகொண்ட பகுதியில் நகரின் விரிவாக்கத்துக்கு உதவும் இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கரூர் பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இடம் ஒப்படைக்கப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும்

இதுகுறித்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.ரேவதியிடம் கேட்டபோது, “கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான இடம் ஒப்படைக்கப்பட்டவுடன் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்படும்” என்றார்.

கரூர் நகராட்சி ஆணையர் ப.அசோக்குமார் கூறியபோது, “கரூர் சணப்பிரட்டியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பான அனைத்து விவரங்களும் அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது” என்றார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மை மருந்தாளுநரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவருமான எம்.சுப்பிரமணியன் கூறியபோது, “மருத்துவக் கல்லூரி பணிகள் தாமதமாவதற்கு இடப் பிரச்சினை காரணமல்ல. அதன் பின் உள்ள அரசியல் தலையீடுகளே காரணம். மருத்துவக் கல்லூரி எங்கு அமைந்தாலும் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு போதிய இடவசதி உள்ள இடத்தில் அமைக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x