Last Updated : 28 Feb, 2014 10:00 AM

 

Published : 28 Feb 2014 10:00 AM
Last Updated : 28 Feb 2014 10:00 AM

விரிவாக்கப்பட்ட மண்டல பகுதிகளில் 33 ஆயிரம் எல்.இ.டி மின் விளக்குகள்: மார்ச் 31-க்குள் முடிக்க மாநகராட்சி தீவிரம்

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட மண்டலப் பகுதிகளில் வரும் மார்ச் 31-க்குள், 33,034 எல்.இ.டி., மின் விளக்குகள் அமைக்கும் பணியை முடிக்க மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், ஒரு லட்சத்து10 ஆயிரத்து 55 தெரு விளக்கு கம்பங்கள் மற்றும் மின் சக்தி சேமிக்கும் தெரு விளக்குகள், 300 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்படும் என, கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, விரிவாக்கப்பட்ட மண்டல பகுதிகளில் முதல்கட்டமாக, 145.85 கோடி ரூபாயில், 48 ஆயிரத்து 34 எல்.இ.டி., மின் விளக்குகள் மற்றும் தெரு விளக்கு கம்பங்களை அமைக்கும் பணியை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்ட மாநகராட்சி அதற்கான நடவடிக்கையில் இறங்கியது.

இதில், கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, கடந்த ஜனவரி இறுதிவரை, 15 ஆயிரம் எல்.இ.டி., மின் விளக்குகள் மற்றும் தெரு விளக்கு கம்பங்களை மாநகராட்சி அமைத்துள்ளது. மீதமுள்ள எல்.இ.டி., மின் விளக்குகள் மற்றும் தெரு விளக்கு கம்பங்களை வரும் மார்ச் 31- க்குள் முடிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

33 ஆயிரத்து 34 எல்.இ.டி., மின் விளக்குகள் மற்றும் தெரு விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடந்துவருகிறது. அதில் தற்போது,1500 எல்.இ.டி., மின் விளக்குகள் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, வரும் மார்ச் 31-ம் தேதிக்குள், 33 ஆயிரத்து, 34 எல்.இ.டி., மின் விளக்குகள் மற்றும் தெரு விளக்கு கம்பங்களை அமைக்கும் பணியை முற்றிலுமாக முடித்துவிடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x