Published : 09 Aug 2016 01:19 PM
Last Updated : 09 Aug 2016 01:19 PM

பழம்பெரும் திரை ஆளுமை பஞ்சு அருணாசலம் காலமானார்

பிரபல திரைப்பட தயாரிப்பாள ரும், வசனகர்த்தாவும், பாடலாசிரி யருமான பஞ்சு அருணாசலம் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 76.

தமிழ்த் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என்று பல துறைகளில் சாதனைகளைச் செய்தவர் பஞ்சு அருணாசலம். இவர் மாரடைப்பு காரணமாக நேற்று காலை காலமானார். பஞ்சு அருணாசலத்துக்கு மீனா என்ற மனைவியும், சண்முகம், பஞ்சு சுப்பு ஆகிய மகன்களும், கீதா, சித்ரா ஆகிய மகள்களும் உள்ளனர். அவர்களில் மகன் சண்முகம், மகள் கீதா இருவரும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் வந்ததும் பஞ்சு அருணாசலத்தின் இறுதிச் சடங்குகளை நடத்த அவரது குடும் பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

பஞ்சு அருணாசலம் 1941-ம் ஆண்டு காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவிஞர் கண்ணதாசன் ஆகிய இருவரும் இவரது சித்தப்பாக்கள். கதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட அவர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்து தனது கலைப் பயணத்தை தொடங்கினார்.

1962-ல் வெளியான 'சாரதா' படத் துக்கு பஞ்சு அருணாசலம் எழுதிய, ‘மணமகளே மருமகளே வா வா’ என்ற பாடல் அவருக்கு பெரும் புகழைத் தந்தது. ஆரம்ப நாட்களில் ‘ஹலோ பார்ட்னர்’ என்ற படத்துக்கு இவர் கதை எழுதியுள்ளார். இதில் நாகேஷ் நாயகனாக நடித்துள் ளார். பின்னாளில் இவர் திரைக் கதை - வசனம் எழுதி தயாரித்த ‘அன்னக்கிளி’ படம் பெரும் வெற் றியைப் பெற்றது. இந்தப் படத் தின் மூலம்தான் இசைஞானி இளையராஜா இசையமைப் பாளராக அறிமுகமானார்.

ரஜினிகாந்த் நடித்த ‘ஆறிலிருந்து 60 வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘குரு சிஷ்யன்’, ‘வீரா’, கமல் நடித்த ‘கல்யாணராமன்’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, பாக்யராஜ் இயக்கி, நடித்த ‘ராசுக்குட்டி’, விஜயகாந்த் நடித்த ‘அலெக்ஸாண்டர்’, சேரன் கதாநாயகனாக அறிமுகமான ‘சொல்ல மறந்த கதை’, சூர்யா நடித்த ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ உட்பட பல படங்களை இவர் தயாரித்துள்ளார்.

சிவாஜி நடித்த ‘வாழ்க்கை’, ‘அவன்தான் மனிதன்’, ரஜினி நடித்த ‘ராஜா சின்ன ரோஜா’, ‘பாயும் புலி’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘முரட்டுக் காளை’, கமல் நடித்த சிங்காரவேலன், ‘உயர்ந்த உள்ளம்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘சகலகலா வல்லவன்’உட்பட 25-க் கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக் கதை எழுதியுள்ளார். ‘புதுப்பாட்டு’, ‘கலிகாலம்’, ‘தம்பி பொண்டாட்டி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் கதை - வசனம் எழுதி தயா ரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு சிறந்தப் படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத் துள்ளது. தமிழக அரசின் கலை மாமணி விருது உட்பட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் எஸ்பி.முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, மனோபாலா, இயக்குநர்கள் சுந்தர் சி, வெங்கட் பிரபு, நடிகைகள் குஷ்பு, கோவை சரளா, விஜயலட்சுமி, இசையமைப் பாளர்கள் யுவன்ஷங்கர் ராஜா உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x