Published : 06 Feb 2014 08:44 PM
Last Updated : 06 Feb 2014 08:44 PM

நெல்லை: தோல் பாவைக்கு தோள் கொடுங்கள்: மாணவர்களிடம் மனம் திறந்த கூத்துக் கலைஞர்

தோல்பாவைக்கு அனைவரும் தோள் கொடுக்க வேண்டும் என்று, தோல் பாவைக் கூத்துக் கலைஞர் நாகர்கோவில் முத்துச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறையின் கரிசல் திருவிழாவில், முத்துச் சந்திரன் குழுவினரின் தோல்பாவைக் கூத்து, பல்கலைக்கழக கலையரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 400 வருடப் பழமை வாய்ந்த தோல்பாவைக் கூத்துக் கலையை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

தோல்பாவைக் கூத்துக் கலைஞர் முத்துச்சந்திரன், தன்னுடைய குரலால் கூத்தில் வரும் எல்லா பாத்திரங்களுக்கும் குரல் வழங்கியதும், அவரே எல்லாப் பாத்திரங்களையும் திரையின் பின்னாலிருந்து கையாண்டதும் மாணவர்களை பிரமிக்க வைத்தது.

வாழ்க்கையில் எந்தளவுக்கு கல்வி முக்கியம் என்பதை நகைச்சுவையாகவும் எளிமையாகவும், மாணவர்களை ஈர்க்கும் விதமாகவும் விளக்கும் வகையில் கூத்து அமைந்திருந்தது. அழிந்து வரும் இந்தக் கலைக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையை ஒவ்வொரு மாணவரும் முன்னெடுக்க வேண்டும் என்று நிகழ்வில் உறுதியெடுத்துக்கொண்டனர்.

முத்துச்சந்திரன் பேசுகையில், “எங்கள் குடும்பத்தார் 6 தலைமுறையாக இந்தக் கலையை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இப்போது நலிவடைந்து வரும் இக்கலை, மராட்டிய மாநிலம், புனே பகுதியில், சரபோஜி மகாராஜா காலத்தில் பரவலாக வளர ஆரம்பித்தது.

தற்போது, நவீன முறையில் கல்வி, பல்லுயிர் பெருக்கம், ரத்த சோகை, எச்.ஐ.வி, சுத்தம் சுகாதாரம், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை நிகழ்த்தி வருகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியே இந்தக் கலை நலிவடையக் காரணம். அழிந்துவரும் இக் கலையை காப்பாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.

தொடர்பியல் துறைத் தலைவர் பி. கோவிந்தராஜூ, இணைப் பேராசிரியர் பாலசுப்பிரமணியராஜா, உதவிப் பேராசிரியர்கள் சுந்தரராமன், ராதா பத்திரன் மற்றும் த. ஜெய்சக்திவேல் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x